Save the country from anarchy! Vishal!
அராஜகத்தில் இருந்து என் அன்பான நாட்டை காப்பாற்றுங்கள் என்று நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஜெ. மறைவுக்குப் பிறகு ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் வரும் 21 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து, அதிமுக, திமுக, பாஜக மற்றும் டிடிவி தினகரன், நடிகர் விஷால், சுயேச்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில், நடிகர் விஷால் தாக்கல் செய்த மனுவில், முன்மொழிந்தவர்கள் இருவர் தங்களது கையெழுத்து இல்லை என்று மறுப்பு தெரிவித்தனார். இதனால், விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி கூறினா. தனக்கு முன்மொழிந்தவர்களை மதுசூதனனின் ஆட்கள் மிரட்டியதாக விஷால் குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து, அவரது மனு ஏற்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் மீண்டும் நிராகரிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து, தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம், விஷால் புகார் அளித்தார். மேலும், இந்திய தேர்தல் ஆணையத்திலும் அவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது, தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. அதில் தேர்தல் அதிகாரி எடுத்த முடிவே இறுதியானது என்றும், விஷாலின் மனுவை பரிசீலனை செய்வது குறித்து தேர்தல் அதிகாரியிடமே அவர் முறையிடலாம் என்றும் பதில் அளித்துள்ளது.

இந்த நிலையில், நடிகர் விஷால், தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஜனநாயகம் அதன் தலையை மீண்டும் உயர்த்துவதற்காக காத்திருக்கிறது என்றும் கடவுளே இங்கு நடக்கும் அராஜகத்திலிருந்து என் அன்பான நாட்டை காப்பாற்றுங்கள் என்றும் பதிவிட்டுள்ளார். நடிகர் விஷாலின் இந்த பதிவுக்கு நெட்டிசன்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
