சாத்தான்குளம் சம்பவத்தில் நியாயத்தை நிலை நாட்டிய தமிழக முதல்வருக்கு நன்றி என ஜெயராஜின் மகள்  பெர்சி நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தனது தந்தை மற்றும் சகோதரர் உயிரிழந்த வழக்கில் விரைந்து விசாரணை நடத்தி தங்களுக்கு நீதி வழங்கிய தமிழக முதலமைச்சருக்கும், நீதித்துறைக்கும் நன்றியை  தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம்  சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிஸ் ஆகியோர், ஊரடங்கு கட்டுப்பாட்டை மீறி கடையை திறந்து வைத்ததாக அவர்கள் மீது குற்றம்சாட்டிய சாத்தான்குளம் போலீசார், கடந்த 19ஆம் தேதி அவர்களை கைது செய்ததுடன், கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். பின்னர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் 21 ஆம் தேதி பென்னிக்சும் மறுநாள் ஜெயராஜ்யும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதுதொடர்பாக கோவில்பட்டி காவல் நிலைய காவலர்கள் தனித்தனியே வழக்கு பதிந்தனர். காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதே தந்தை,மகன் இறப்புக்கு காரணம் என கூறிய சாத்தான்குளம் பொதுமக்கள் காவல் ஆய்வாளர் உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தை மகனுக்கு போலீசால் நேர்ந்த கொடூரம் நாடு முழுவதும் காட்டுத்தீயாய் பரவியதுடன், பல்வேறு தரப்பினரும் இச்சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் இறங்கினார். இதையடுத்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.  இதனையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கை விசாரணை செய்தது. பின்னர் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது, சிபிஐ விசாரணை தொடங்க காலதாமதம் ஆகும் என்பதால் அதுவரை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட 2 வழக்குகளையும் சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்காக திருத்தம் செய்தனர்.  இதற்கிடையில் வழக்கு  விசாரணை தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், உதவி ஆய்வாளர் ரகு கணேசன் புதன்கிழமை இரவு கைது செய்யப்பட்டார். மற்றவர்களை தேடி வருவதாக  சிபிசிஐடி  போலீசார் தெரிவித்தனர். 

இந்நிலையில் தூத்துக்குடியில் வைத்து விசாரித்து வந்த சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும்  இரண்டு காவலர்களையும் வியாழக்கிழமை காலை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். சாத்தான்குளத்தில் தந்தை-மகன் மரணமடைந்த வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றப்பட்டு ஆய்வாளர், உதவி ஆய்வாளர் காவலர்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிபிசிஐடி போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையை நீதிமன்றம் வரவேற்றுள்ளது. மேலும் இந்த வழக்கில் நீதி நிலைநாட்டப்படும்  என்ற நம்பிக்கையை சிபிசிஐடி போலீசார் உருவாகியிருப்பதாக உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து தெலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள, உயிரிழந்த ஜெயராஜின் மகளும்,  பென்னிசின் சகோதரியுமான பெர்சி, தனது தந்தை மற்றும் சகோதரர் உயிரிழந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து தங்களுக்கு நீதி வழங்கியுள்ள தமிழக முதலமைச்சருக்கும், தாமாக முன் வந்து விசாரணை செய்து நீதி நிலைநாட்டியுள்ள உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும்  சிபிசிஐடி காவல்துறை அதிகாரிகளுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். தந்தை சகோதரரை பறிகொடுத்த நிலையில், தங்களுக்கு நீதி வழங்கப்படவேண்டும் என பெர்சியின் குடும்பத்தினர் மட்டுமல்லாது நாடு முழுவதும் கோரிக்கை வலுத்த  நிலையில்  தற்போது தங்களுக்கு  நீதிகிடைத்துள்ளதாக பெர்சி கூறியுள்ளார்.