சாத்தான்குளம் கொலை சம்பவத்தில் போலீசார்களை கைது செய்ததோடு தமிழக அரசின் கடமை முடிந்து விட்டது என்று நினைக்க வேண்டாம். இந்த சம்பவத்தை பொருத்தவரை மக்கள் உன்னிப்பாக என்ன நடக்கிறது என்று கவனித்துக்கொண்டே இருக்கிறார்கள். இந்த கொலையில் "பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்" தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.அவர்களையும் விசாரிக்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

சாத்தான்குளம் செல்போன்கடை உரிமையாளர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த சம்பவத்தில் நீதிமன்றமும் அரசியில்கட்சிகள் சமூக ஆர்வலர்கள் கடுமையாக போராடி ஒருவழியாக கொலையில் சம்மந்தப்பட்ட காவலர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் பெண் காவலர் ரேவதி, மற்றுமொறு காவலர் பால்துரை சாட்சியாக மாறியுள்ளனர். தலைமைக்காவலர் ரேவதிக்கு போலீஸ் பாதுகாப்பு விடுமுறையுடன் கூடிய சம்பளம் வழங்கப்படும் என்று தென்மண்டல ஐஐி முருகன் தெரிவித்துள்ளார்.
 
இந்த கொலை சம்பவத்தில் காவலர்கள் மட்டுமல்லாது "ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ்" ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. "ப்ரெண்ட்ஸ் ஆப் போலீஸ் "என்பது காவல்துறைக்கு உதவுவதற்காக உள்ளூர் பகுதிகளில் உள்ள இளைஞர்களை கொண்ட அமைப்பு. இதில் உள்ளவர்களும் இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக கூறப்படுகிறது.

 இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்... "காவலர்கள் கைது செய்யப்பட்டதால் கடமை முடிந்ததாகத் தமிழக அரசு தப்புக் கணக்குப் போடக்கூடாது.இந்த வழக்கின் ஒவ்வொரு நகர்வினையும், மக்களும், அரசியல் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும், வணிகப் பெருமக்களும் கண்காணித்துக் கொண்டேதான் இருப்பார்கள். யாரையும் காப்பாற்றத் தமிழக அரசு முயற்சிக்கக் கூடாது.இரண்டு பேர் கொலைக்குக் காரணமான அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். 'பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசை' சேர்ந்த சிலருக்கும் இதில் நெருக்கமான தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களும் விசாரிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.