சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் உயிரிழந்தது லாக் - அப் மரணம் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பெனிக்ஸ் ஆகியோர் செல்போன் கடையை குறித்த நேரத்தில் மூடவில்லை என்று காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரிக்கப்பட்டனர். அப்போது, லத்தியை அவர்களின் பின்புறம் வழியே உடலுக்குள் திணித்துக் கொடுமைப்படுத்தியும், வேட்டி - சட்டையெல்லாம் ரத்தத்தில் நனையும் வகையில் சித்திரவதை செய்திருந்த நிலையில் கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தந்தை மகன் உயிரிழந்தனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலின், வைகோ, ராமதாஸ், கனிமொழி மற்றும் சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள்  லாக்-அப் மரணத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில், கோவில்பட்டி அருகே எட்டையபுரத்தில் காவலர்கள் தாக்கியதால் தற்கொலை செய்து கொண்ட கணேசமூர்த்தியின் வீட்டுக்கு சென்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ, அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். பின்னர், செய்தியாளர்களை பேட்டியளித்த அவர் சாத்தன்குளத்தில் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கிளைச்சிறையில் அடைக்கப்பட்டு 2 நாட்கள் கழித்தே உயிரிழந்தனர். லாக்-அப்பில் இருக்கும் போது காவலர்கள் தாக்கி உயிரிழந்தால் மட்டுமே அது லாக்-அப் மரணம். மேலும் நீதிமன்றத்தின் அறுவுறுத்தலின் படி இருவரின் பிரேத பரிசோதனை நடைபெற்றுள்ளது.

மேலும் சாத்தான்குளம் சம்பவம் லாக்-அப் மரணம் என்று கனிமொழி கூறியுள்ளார். திமுக ஆட்சி காலத்திலும் லாக்-அப் மரணம் நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பூரில் உள்ள காவல் நிலையத்தில் 1996ல் திமுக ஆட்சி காலத்தில் 2 பேர் உயிரிழந்த லாக் அப் மரணம் நடைபெற்று உள்ளது. இதை அரசியலுக்காக அவர் சொல்லுவதாக தான் எண்ண வேண்டும். சாத்தான்குளம் விவகாரத்தினை தேர்தல் வாக்கு வங்கிற்காக எதிர்கட்சிகள் செய்ய நினைத்தால் மக்களுக்கு உண்மை தெரியும்.

முதலில் காவல்துறையினர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டாலும், மக்களின் உணர்வுகளை மதித்து பணியிடை நீக்கம் செய்து முதல்வர் உத்தரவிட்டார். நீதிமன்றம் என்ன வழிமுறை சொல்கிறதோ, என்ன தீர்ப்பு சொல்கிறதோ உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசு தயராக உள்ளது என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.