தூத்துக்குடியில் தந்தை,மகன் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் கைதாகியுள்ள காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் இடது கை செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் பரிசோதனை செய்த பிறகு அறிக்கை வழங்கியிருக்கிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கை மீறி கடை வைத்ததாகக் கைது செய்யப்பட்ட வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசாரின் தாக்குதலில் உயிரிழந்தனர்.சம்பவத்தன்று பணியில் இருந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்ஐக்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 10 காவலர்கள் மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை இரட்டை கொலையாக வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது சிபிஐ டீம்.


சிறைக்குள்  அனைத்து கைதிகளுக்கும் வழக்கம்போல மருத்துவ சிகிச்சை அளிப்பதும் பரிசோதனை செய்வதும் வழக்கம். அந்தவகையில் எலும்பு சிகிச்சை மருத்துவர் மருத்துவ பரிசோதனை செய்த போது போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், தனக்கு பின்பக்க கழுத்தில் தொடர்ந்து வலி இருப்பதாக கூறினாராம். இதையடுத்து, மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் எடுக்கப்பட்டிருக்கிறது. மருத்துவ ஸ்கேனின் அறிக்கையை பார்த்த மருத்துவர்கள்,போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரின் இடது கை செயலிழந்துள்ளதாக கூறியுள்ளனர். 2013 ம் ஆண்டு நடந்த விபத்தில் அவரின் முதுகு தண்டில் பாதிப்பு ஏற்பட்டதன் விளைவாக, தற்போது இடது கை செயலிழந்துள்ளது. இதையடுத்து அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.