சாத்தான்குளம் விவகாரத்தில் குற்றவாளிகளைக் காக்கும் நோக்கத்தோடு மௌனம் காக்கிறது என திமுக எம்.பி கனிமொழி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருந்ததற்கு அமைச்சர் கடம்பூர் ராஜு மறுப்பு தெரிவித்துள்ளார்.


சாத்தான்குளம் ஜெயராஜ் பென்னீக்ஸ் ஆகியோரை போலீஸ் விசாரணையின் பேரில் அடித்துக்கொன்ற சம்பவம் உலகத்தையே உலுக்கி எடுத்துள்ள சம்பவங்களில் இதுவும் இடம் பெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் காவல்துறையின் கொலைகார மாவட்டமா? என்று எதிர்க்கட்சிதலைவர் ஸ்டாலின் கேட்டு அறிக்கை வெளியிட்டிருந்தார். திமுகவும் அதிமுகவும் மாறி மாறி நிதி அளித்தார்கள். ஆனால் இறந்தவர்களின் குடும்பத்தின் இழப்புகளை ஈடுசெய்ய யாராலும் முடியாத அளவிற்கு போலீஸ் கோரதாண்டவம் ஆடியது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

திமுக எம்பி.கனிமொழி, "சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் தந்தை மகன் என இரண்டு பேர் கொல்லப்பட்ட நிலையிலும் இதுவரை சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படாததும், கைது நடவடிக்கை எடுக்கப்படாததும் ஏன்? எடப்பாடி அரசு இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை காக்கும் நோக்கத்தோடு மௌனம் காக்கிறது” என்று ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

அதற்கு பதில் அளிக்கும் விதமாக  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு இன்று செய்தியாளர்களை சந்தித்தார்
, "சாத்தான்குளம் சம்பவத்தில் அரசு யாரையும் காப்பாற்ற முயற்சிக்கவில்லை. நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். சாத்தான்குளத்தில் நடைபெற்ற சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது நீதிமன்ற முடிவின்படி அரசு உடனடி நடவடிக்கை எடுக்கும் என்கிற கருத்தை ஏற்கனவே தெரிவித்திருந்தேன்.அதை மறைத்து, அரசு சம்பந்தப்பட்டவர்களைக் காப்பாற்ற முயற்சிப்பதாக கனிமொழி தவறான கருத்தைப் பதிய வைக்க முயற்சிக்கிறார். இதில் துளி அளவும் உண்மை இல்லை என்று தெரிவித்துள்ளார்.