சசிகாந்த் செந்தில்..! தமிழக காங்கிரசின் புதிய அதிகார மையம்..! கடுகடுக்கும் கார்த்தி ப.சிதம்பரம்..!
கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த சசிகாந்த் செந்தில் கடந்த 2019ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு அப்போது அவர் கூறிய காரணம், இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பையே பாஜக அரசு சேதப்படுத்துவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது ஐஏஎஸ் அதிகாரி பதவியை ராஜினாமா செய்வதாகவும் சசிகாந்த் செந்தில் கூறியிருந்தார்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய அதிகார மையங்களில் ஒருவராக சசிகலாந்த் செந்தில் என்பவர் வளர்ந்து வருவது சில சீனியர் லீடர்களை ஆத்திரம் கொள்ள வைத்துள்ளது.
கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த சசிகாந்த் செந்தில் கடந்த 2019ம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு அப்போது அவர் கூறிய காரணம், இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பையே பாஜக அரசு சேதப்படுத்துவதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது ஐஏஎஸ் அதிகாரி பதவியை ராஜினாமா செய்வதாகவும் சசிகாந்த் செந்தில் கூறியிருந்தார். அப்போதே சசிகாந்துக்கு ஆதரவாக கர்நாடகாவில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் அண்மையில் இவர் காங்கிரஸ் கட்சியின் தன்னை இணைத்துக் கொண்டார்.
இதனை அடுத்து அவருக்கு முதலில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. அப்போது முதலே தமிழ் ஊடகங்களில் காங்கிரசின் முகமாகமாறும் பணியை அவர் சிறப்பாக செய்து வந்தார். இதனை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் அவருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக சமூக ஊடங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பு மற்றும் காங்கிரசின் முக்கிய பிரிவுகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பும் அவருக்கு வழங்கப்பட்டது.
அப்போது முதலே சசிகாந்த் செந்தில் தினந்தோறும் சத்தியமூர்த்தி பவன் வருகை தருவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். தினந்தோறும் ஏதேனும் ஒரு பிரிவின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ட்விட்டர் கணக்கிற்கும் அவர் புத்துயிர் ஊட்டியுள்ளார். இதோடு டெல்லியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகளுடன் சசிகாந்த், நேரடி தொடர்பில் இருப்பதாக சொல்கிறார்கள். ராகுல் காந்தி தற்போது தமிழக காங்கிரசின் நிலவரத்தை கேட்டுத் தெரிந்து கொள்ளும் வெகு சிலரில் சசிகாந்த் செந்திலும் ஒருவர் என்கிறார்கள்.
தமிழக காங்கிரஸ் கமிட்டியில் இருந்து வெகு சிலரால் மட்டுமே ராகுலை நேரடியாக தொடர்பு கொள்ள முடியும். ஆனால் அவர்கள் அனைவரையும் காட்டிலும் ராகுலை வெகு எளிதாக சசிகாந்த் தொடர்பு கொள்வதாக சொல்கிறார்கள். இவர் கொடுக்கும் இன்புட்டுகளின் அடிப்படையில் தான் தற்போது கட்சியில் நிர்வாகிகள் நியமனம் நடைபெறுவதாக சொல்கிறார்கள். அதிலும் சமீபத்தில் தமிழகம் முழுவதும் சுமார் 70 கட்சி ரீதியிலான மாவட்டங்களுக்கும் பொறுப்புகளை போடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளையும் சசிகாந்த் செந்தில் தான் ஒருங்கிணைத்து வருவதாக கூறுகிறார்கள்.
இந்த நியமனங்களின் போது வாரிசுகள், கட்சிக்கு தொடர்பில்லாதவர்கள் பதவிகளுக்கு வருவதை கூடுமான அளவிற்கு தடுக்கும் பணியில் சசிகாந்த் செந்தில் ஈடுபட்டுள்ளதாகவும் சொல்கிறார்கள். இதனால் கட்சியின் சில சீனியர்கள் சசிகாந்த் மீது கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அண்மையில் விநாயகர் சதுர்த்தி விவகாரம் தொடர்பாக அண்ணாமலை ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியை விமர்சித்து சசிகாந்த் செந்தில் ஒரு ட்வீட் செய்திருந்தார். அந்த ட்வீட்டை அப்படியே காப்பி செய்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பேஸ்ட் செய்ததுடன் கீழே ஒருங்கிணைப்பாளர் சசிகாந்த் செந்தில் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த ட்வீட்டை ரீ ட்வீட் செய்த கார்த்தி ப சிதம்பரம், ஒருங்கிணைப்பாளர் என்றால் எதற்கு ஒருங்கிணைப்பாளர், ஒட்டு மொத்த கட்சிக்குமா? என்று வெளிப்படையாகவே கேட்டிருந்தார். இதற்கு காங்கிரசில் வெளிப்படையாக யாரும் பதில் கூறவில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக இந்த விவகாரத்தை மையமாக வைத்து சத்தியமூர்த்தி பவனில் காரசார வாக்குவாதம் நடைபெற்று வருகிறது. கட்சிக்கு இப்போது வந்தவரின் ட்வீட்டை கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் போடும் அளவிற்கு யார் முக்கியத்துவம் கொடுப்பது என்கிற கேள்விக்கு பதிலாக சிலர் டெல்லியை கை காட்டியுள்ளனர். இதன் மூலமாகவே தற்போது சசிகாந்தும் தமிழக காங்கிரசின் ஒரு அதிகார மையமாகியிருப்பது தெரியவந்துள்ளது.