பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை பரோலில் கொண்டு வந்து ஜூன் மாதத்தில் தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்வேன் என அறிவித்திருந்த நடராஜன் கடைசிவரை அவரது ஆசை நிறைவேறாமல் உடல்நலக்குறைவால் காலமானார். 

சந்திரலேகா என்பவர் மூலம் நடராசன்- சசிகலா தம்பதிக்கு ஜெயலலிதாவின் அறிமுகம் கிடைத்துள்ளது. நடராசன் காலப்போக்கில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராக மாறினார். 1985-ல் நேரடி அரசியலுக்கு வந்த ஜெயலலிதாவுக்கு ஆலோசகராக நடராசன் செயல்பட்டார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் பல்வேறு உச்சகட்ட குழப்பங்கள் நிலவின. இதையடுத்து அதிமுகவை எப்படியாவது தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என நடராஜன் முயற்சித்தார். 

அதற்கு சசிகலாவை பகடை காயாய் முன்னிறுத்தினார் நடராஜன். சசிகலாவை வைத்தே காய் நகர்த்த ஆரம்பித்தார். ஜெயலலிதா உடல் புதைக்கப்பட்ட சில மணி நேரங்களில் செய்தியாளர்களை சந்தித்தார் நடராஜன். 

அப்போது, எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் ஜெயலலிதாவை அரசியல் தலைவியாக உருவாக்கியதே தாங்கள்தான் என்றும் அதிமுகவை அவ்வளவு எளிதாக விட்டுவிட மாட்டோம் எனவும் கூறி பரபரப்பை உண்டாக்கினார். 

இதைதொடர்ந்து தஞ்சையின் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடராஜன், அதிமுக எங்களுடையது; நாங்கள் குடும்ப ஆட்சிதான் நடத்துவோம் என சூட்டை கிளப்பினார். 

ஆனால் சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதனால் டிடிவி தினகரன் மீண்டும் அரசியலில் தலையெடுத்தார். ஆனால் அவரின் செயல்பாடுகள் நடராஜனுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. 

இதையடுத்து கடந்த ஆண்டு நடராஜனுக்கு உடல்நிலை மிகவும் மோசமானது. அறுவை சிகிச்சைக்கு பிறகு சற்று உடல்நலம் தேறினார். அதற்கு சிலநாட்களுக்கு முன்னதாக பேசிய நடராஜன் சசிகலாவுடன் ஜூன் மாதம் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளப் போகிறேன். இதற்காக சசிகலாவை பரோலில் கொண்டு வருவேன் என தெரிவித்திருந்தார். 

ஆனால் சொகுசு கார் இறக்குமதி மோசடி வழக்கில் நடராஜனுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. உடல்நிலையை காரணம் காட்டி சிறைக்கு செல்லாமல் இருந்த நடராஜன், சிகிச்சைப் பலனின்றி நள்ளிரவு 1.35 மணிக்கு உயிரிழந்தார். 

சசிகலாவை பரோலில் அழைத்து வந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்ற நடராஜனின் ஆசை கடைசி வரை நிறைவேறாமலே போனது.