சொத்து குவிப்பு வழக்கில், நீதிமன்றம் அளித்த தண்டனையால், முதல்வர் கனவு தகர்ந்ததையடுத்து, கட்சியும், ஆட்சியும் தமது கட்டுப்பாட்டை விட்டு எக்காரணம் கொண்டும் அகன்றுவிட கூடாது என்பதில் உறுதியாக இருந்தார் சசிகலா.

அதன் காரணமாக, தமது அக்காள் மகன் தினகரனை கட்சியின் துணை பொது செயலாளராக நியமித்து, அவருக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த பின்னரே, அவர் பெங்களூரு சிறைக்கு சென்றார்.

அவர் சிறை சென்ற நாள் முதலே, கட்சியில் குழப்பம் மேல் குழப்பமாக அரங்கேற தொடங்கின. அதில் பெரும்பாலான குழப்பங்களை தினகரன் உருவாக்கி விட்டார்.

சசிகலா சிறை சென்ற அடுத்த சில தினங்களிலேயே, அவர் பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று, ஓ.பி.எஸ், தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையிட்டார்.

அவரது புகாருக்கு விளக்கம் அளிக்க கோரி, சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால், சசிகலாவுக்கு பதில் தாமாக ஒரு விளக்கத்தை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தார் தினகரன்.

அவருடைய விளக்கம் நிராகரிக்கப்பட்டு, மீண்டும் சசிகலாவே விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம், கூறியதன் பேரில், சசிகலா விளக்கம் அளிக்க நேர்ந்தது. 

அடுத்து, கட்சியையும், ஆட்சியையும் தமது முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வரும் வகையில், மன்னார்குடி உறவுகள் அனைத்தையும் ஓரம் கட்டிவிட்டு, தமது மனைவி அனுராதா, மைத்துனர் டாக்டர் வெங்கடேஷ் ஆகியோருக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்தார் தினகரன்.

இந்த தகவல் அனைத்தும், சிறையில் உள்ள சசிகலாவுக்கு போனதும் அவர் கடும் அதிர்ச்சி அடைந்தார். பெங்களூரிலேயே தங்கி அடிக்கடி சசிகலாவை சந்தித்து வரும் இளவரசி மகன் விவேக்கிடம், இதுகுறித்து சொல்லி வேதனை பட்டார் சசிகலா.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், சசிகலா உள்பட யாரையுமே கலந்து ஆலோசிக்காமல் தாமாகவே வேட்பாளராக களமிறங்கினார் தினகரன்.

தமது  குடும்பத்தினர் மீது பொதுமக்கள் கடும்  அதிருப்தியில் உள்ள நிலையில், ஆர்கே நகர் இடைத்தேர்தலில், தினகரனே வேட்பாளராக களம் இறங்கியது சசிகலாவுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. 

மேலும், தேர்தல் ஆணையத்தால் கட்சியின் பெயர், இரட்டை இலை சின்னம்  போன்றவை முடக்கப்பட்ட விஷயம், சசிகலாவை கொஞ்சம் அதிகமாகவே பாதித்தது.

தேர்தல் ஆணையத்தால் சின்னம் முடக்கப்பட்டது மற்றும் தினகரன் வேட்பாளராக களமிறங்கியது ஆகியவை குறித்து, தம்மை சிறையில் சந்தித்த அமைச்சர்களிடம் கொட்டி தீர்த்துவிட்டார்  சசிகலா.

இந்நிலையில், ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா விவகாரத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர், நடத்திய அதிரடி சோதனையில், மனம் உடைந்து போனார் சசிகலா.

அதையடுத்து, மகாதேவன் மரணமும், அதில் பங்கேற்க, கர்நாடக போலீஸ் பாதுகாப்புடன் சொந்த ஊருக்கு சென்றால் அவமானம் என்று கருதி, மனதுக்குள்ளேயே குமைந்து கொண்டிருந்தார் அவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, சுகேஷ் சந்திரா என்ற புரோக்கரிடம், லஞ்சம் கொடுத்த புகாரில், தினகரன் கைது செய்யப்படும் நிலை உருவாகி உள்ளதால், தமது தலையில் இடியே இறங்கியது போல கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி சசிகலாவின்  உடல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், எந்த நோக்கத்திற்காக தினகரனிடம் துணை பொது செயலாளர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதோ, அந்த நோக்கமே சிதையும் வகையில், ஓ.பி.எஸ்ஸும் - எடப்பாடியும் கைகோர்க்கும் நிலை உருவாகி இருப்பது, சசிகலாவை நிலைகுலைய வைத்துள்ளது.

இவ்வாறு, அடுத்தடுத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ள தினகரன், சிறையில் இருக்கும் சசிகலாவை சந்திக்கும்போது, அங்கே என்னென்ன காட்சிகள் அரங்கேறப்போகிறதோ? என்று ஆடிப்போயுள்ளனர் தினகரன் ஆதரவாளர்கள்.