அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இரண்டாம் நாளாக இன்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். ஊடகங்கள் மூலம் கழகத்திற்கு கெட்டபெயர் ஏற்படுத்துவார்கள் என சசிகலா எச்சரிக்கை விடுத்தார்.

கடந்த 4-ந்தேதி இந்த ஆலோசனை கூட்டம் தொடங்கியது. அன்றைய தினம் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இன்று சசிகலா 2-வது நாளாக மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில்  தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அவர்களுடன் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை அ.தி.மு.க. தொடர்ந்து நிறைவேற்றிடும். நீங்கள் எப்போதும் போல் கழகப் பணியாற்றுங்கள். மக்களுக்கும், ஆட்சிக்கும் பாலமாக இருங்கள். 

கழகத்தின் வளர்ச்சியை பொருத்துக் கொள்ள முடியாதவர்கள் சில ஊடகங்கள் மூலமாக எதிர்ப்பாகவும், மறைமுகமாகவும் சூழ்ச்சிகளை செய்து கழகத்துக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த முயல்கிறார்கள். 

அந்த சதியை முறியடிக்கும் வகையில் கழக நிர்வாகிகள் கட்சிக்காக மேலும் தீவிரமாக செயல்பட வேண்டும்.
6 மாதத்துக்கு ஒருமுறை மாவட்ட அளவில் நிர்வாகிகள், அனைத்து கழக தோழர்களையும் அழைத்து கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசிக்க வேண்டும். ஜெயலலிதா ஆட்சியின் திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கும் வகையில் உங்கள் பணி அமைய வேண்டும்.

நீங்கள் திறம்பட பணியாற்றுங்கள், அனைவரையும் அரவணைத்துச் செல்லுங்கள், உங்களுக்கு உதவ நான் தயாராக இருக்கிறேன். என்று சசிகலா பேசினார்.

கூட்டம் முடிந்ததும் வெளியே வந்த சசிகலா  ஜெயலலிதா பாணியில் பால்கனியில் நின்று  தொண்டர்களைப் பார்த்து இரட்டை விரலை காட்டி கை அசைத்தார்.