வருமான வரித்துறையிடம் இருந்து தொடர்ந்து லீக் ஆகும் தகவல்கள் தினகரன் மீதான நம்பிக்கையை சசிகலா எப்போதோ இழந்துவிட்டார் என்பதை தெரிவிக்கும் வகையில் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

சிறைக்கு செல்வதற்கு முன்னதாக அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக தினகரனை நியமித்துவிட்டு சென்றார் சசிகலா. துணைப் பொதுச் செயலாளராக இருந்தாலும் பொதுச் செயலாளருக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் தினகரனுக்கு கொடுக்கப்பட்டது. இதனால் அதிமுகவின் அதிகாரமிக்க நபராக தினகரன் முன்னிலைப்படுத்தப்பட்டார். சசிகலா இந்த அளவிற்கு தினகரனுக்கு முக்கியத்துவம் கொடுத்ததற்கு அவர் மீதான நம்பிக்கை தான் காரணமாக இருந்தது.

சசிகலா சிறைக்கு செல்லும் போது ஆட்சியும் சரி, கட்சியும் சரி சசிகலாவின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. ஆனால் சசிகலா உள்ளே சென்ற சில மாதங்களில் அனைத்தும் மாறியது. தினகரன் அதிமுகவில் ஓரம்கட்டப்பட்டார். பிரிந்து சென்ற ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் அதிகாரத்திற்கு வந்தார். அதிமுகவில் இருந்து தினகரன் விரட்டப்பட்டார். பொதுச் செயலாளர் பதவி சசிகலாவிடம் இருந்து பறிக்கப்பட்டது.

ஆனால் தொடர்ந்து தினகரன் சசிகலாவை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்து வந்தார். அமமுக எனும் கட்சியை துவக்கினார். அந்த கட்சிக்கு பொதுச் செயலாளர் சசிகலா தான் என்றார். மேலும் மாதம் தவறாமல் சிறைக்கு சென்று சசிகலாவை சந்தித்து வந்தார். இதன் மூலம் சசிகலா தனது அரசியல் நகர்வுகளை தினகரன் மூலமாகவே அரங்கேற்றி வருவதாக பேச்சுகள் அடிபட்டன. ஆனால் சசிகலாவுக்கும் – தினகரனுக்கும் இடையிலான கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் சொல்லப்பட்டன.

இந்த சூழலில் தினகரன் தனது நம்பிக்கைக்கு உரியவர்கள் என்று நினைத்த பலரும் முகாம் மாறினர். நாடாளுமன்ற தேர்தலில் படுதோல்வி கிடைத்தது. இடைத்தேர்தலை புறக்கணிக்கும் நிலைக்கு தினகரன் தள்ளப்பட்டார். இந்த நிலையில் சசிகலா அடுத்த ஆண்டு சிறையில் இருந்து வெளியே வருவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. ஆனால் வருமான வரித்துறை மூலமாக மறுபடியும் சசிகலாவுக்கு பிரச்சனை ஆரம்பமாகியுள்ளது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சசிகலா தனது வசம் வைத்திருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை எப்படி சொத்துகளாக மாற்றினார் என்கிற விவரத்தை வருமான வரித்துறை லீக் செய்தது. அதோடு மட்டும் அல்லாமல் சிறையில் இருந்த போதும் கூட சொத்துகள் தொடர்பாக ஜெயா டிவியின் நிர்வாக இயக்குனர் விவேக்குடன் கடிதம் மூலமாக சசிகலா பேசியதையும் வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது.

அதோடு மட்டும் அல்லாமல் நடராஜனுக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி வந்த போதும், அவர் மறைவின் போதும் கூட சசிகலா மற்றும் மன்னார்குடி உறவுகள் சொத்துகள் தொடர்பான கணக்கு வழக்குகளை பார்த்ததும் வருமான வரித்துறையின் சில ஆவணங்கள் மூலம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஆவணங்கள் அனைத்துமே விவேக் தொடர்புடைய இடங்களில் இருந்து மட்டுமே கிடைத்துள்ளன.

இதன் மூலமாக சொத்துகள் விவகாரத்தை சசிகலா தினகரனுடன் விவாதிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. அரசியல் விவகாரத்தில் தினகரனால் ஏற்பட்ட பின்னடைவை தொடர்ந்து சொத்துகள் விவகாரத்தை விவேக் மூலமாகவே சசிகலா கவனித்து வந்திருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது. இந்த அளவிற்கு முக்கிய தகவல்கள் தனக்கு தெரியாமல் விவேக்குடன் சசிகலா பகிர்ந்து கொண்டிருப்பது தினகரன் தரப்பையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளதாக சொல்கிறார்கள்.