தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசுக்கு கடந்த 2 மாதங்களாக கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. விரைவில் வெளி வரப்போகும் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பு, குட்கா ஊழல், நெடுஞ்சாலைத்துறைஊழல், மின்துறை ஊழல் என பல சிக்கல்களில் மாட்டித் திணறி வருகிறது.

எடப்பாடி அரசுக்கு மிகுந்த ஆதரவாக செயல்பட்டு வந்த மத்திய பாஜக அரசும் தற்போது சற்று சற்று பின்வாங்கி இருக்கிறது. முன்பு போல நல்லுறவு இல்லை என்பதால் தான் ரெய்டுகள் எடப்பாடியின் கழுத்தை நெருக்கி வருகிறது.

எடப்பாடி பழனிசாமியின் வலது, இடது கரமாக செயல்பட்டு வரும் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி  ஆகியோர் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியை சந்தித்து சமராசம் பேசியதாக தகவல் வெளியானது.

திருப்பதி கோவிலுக்குச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை சந்தித்ததும் சமரசத்திற்கான காரணமாக பார்க்கப்பட்டது. இது ஒரு புறம் இருக்க கடும் நெருக்கடியில் இருந்து மீள சசிகலாவுடன் சமரசம் ஆகிவிடலாம் என தனி ரூட்டிலும் இபிஎஸ் பயணித்து வருகிறார்.

தனது மனைவி மூலமாக இளவரசியின் மகள் கிருஷ்ணப் பிரியாவைச் சந்தித்து சசிகலாவிடம் சமரசம் பேசியதில்  ஓரளவு வெற்றி கிடைத்திருப்பாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில்தான் பெங்களூரு சிறையில் தன்னைப் பார்க்க வந்த டி.டி.வி.தினகரனிடம், ஏன் இபிஎஸ்சுடன் சமரசம் செய்து கொள்ளக்கூடாது என கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இதில் அதிர்ச்சி அடைந்த டி.டி.வி. அப்செட்டாகி வெளியேறியுள்ளார். அவரை மீண்டும் அழைத்துப் பேசிய சசிகலா, சரி முதலில் இடைத் தேர்தல் வேலையப் பாருங்க, அதில் நாம் ஜெயித்துக் காட்டினால், எந்த நிபந்தனையும் இன்று இபிஎஸ் குரூப் நம்மிடம் சரணடைவார்கள் அப்போது பார்த்துக் கொள்ளலாம் என தினகரனிடம் சமாதானம் பேசியிருக்கிறார். இந்த சமரசப் பேச்சுக்கள் அதிமுக மற்றும் அமமுக கட்சியினரிடையே பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.