சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் ஜாலியாக வெளியே சென்று வருவதைப் போன்று வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்து சிறப்பு சலுகைகள் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த சிறைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட டிஐஜி ரூபா இந்த முறைகேடுகளை கண்டுபிடித்து செய்தி வெளியிட்டார்.

இந்த முறைகேடுகள் குறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் குழு விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவும், இளவரசியும் சாதாரண உடையில் வலம் வரும் புதிய வீடியோ ஆதாரத்தை சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா, லஞ்ச ஒழிப்பு துறையிடம் ஒப்படைத்துள்ளார்.

அதில் சசிகலாவும், இளவரசியும் தங்களின் சொந்த உடையில், பரப்பன அக்ரஹார சிறையின் பிரதான நுழைவாயில் வழியாக சிறைக்குள் வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.

கையில் ஷாப்பிங் பையுடன், சுடிதார் அணிந்து சசிகலா வரும் காட்சி அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளதற்கான ஆதாரம் என கூறி ரூபா, இந்த வீடியோவை அளித்துள்ளார்.

மேலும் பெண்கள் சிறைக்குள் ஆண் காவலர்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் பிரதான நுழைவாயிலிலேயே காவலுக்கு நிறுத்தப்படுவார்கள். இந்த வீடியோவில் சசிகலா கடந்து செல்லும் பொழுது, ஆண் கைதி ஒருவர் சிறை உடையில் இருப்பதும் பதிவாகி உள்ளது. இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.