Asianet News TamilAsianet News Tamil

சசிகலாவுக்கு எதிராக திரும்பிய விசுவாசிகள்: வளைக்க முடியாமல் திணறும் தினகரன்!

sasikala supporters turned against dinakaran
sasikala supporters-turned-against-dinakaran
Author
First Published Apr 19, 2017, 2:19 PM IST


ஜெயலலிதா உயிருடன் இருந்த போதே, கட்சியிலும் ஆட்சியிலும், தமக்கென ஒரு வலுவான ஆதரவாளர்கள் வட்டத்தை உருவாக்கி வைத்திருந்தார் சசிகலா.

ஜெயலலிதா மறைந்த பிறகு, அதுவரை எதிர்த்து வந்த பலரையும், பணம் மற்றும் பதவி ஆசையை காட்டி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார் அவர்.

ஆனால், மத்திய அரசின் நெருக்கடி, தினகரனின் தன்னிச்சையான செயல்பாடு போன்ற காரணங்களால், சசிகலாவின் தீவிர விசுவாசிகளாக கருதப்பட்ட பல அமைச்சர்கள், இன்று அவருக்கு எதிராக திரும்பி விட்டனர்.

sasikala supporters-turned-against-dinakaran

பன்னீர் முதல்வராக இருந்த போதே, சசிகலா முதல்வர் ஆக வேண்டும் என்று குரல் கொடுத்தவரும், சசிகலா எதிரில் செருப்பு கூட போடமாட்டேன் என்று கூறியவருமான அமைச்சர் உதயகுமார் இன்று எதிரணிக்கு வந்து விட்டார்.

அதே போல, சசிகலாவின் தீவிர விசுவாசியாக தன்னை கூறிக்கொண்டு, பன்னீரை கடுமையாக விமர்சித்தவரும், அவர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளமுடியாமல், தடைகளை ஏற்படுத்தியவருமான அமைச்சர் செல்லூர் ராஜும் எதிரணிக்கு வந்து விட்டார்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி வெற்றி பெற்ற பின்னர், ஜெயலலிதா சமாதியில் நின்று ஊடகங்களின் முன்பு ஆனந்த கண்ணீர் வடித்தவரான ஓ.எஸ்.மணியனும் எதிரணியில் ஐக்கியமாகி விட்டார்.   

sasikala supporters-turned-against-dinakaran

சசிகலாவின் நெருங்கிய உறவினரான முன்னாள் அமைச்சரும், தற்போதய மாநிலங்களவை உறுப்பினருமான வைத்திலிங்கமும் எதிரணிக்கு சென்று விட்டார்.

ஜெயலலிதா சமாதியில் பன்னீர்செல்வம்  மவுன அஞ்சலி செலுத்திவிட்டு  சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய போது, அவரை துரோகி என்று உரக்க குரல் கொடுத்த அமைச்சர் சி.வி.சண்முகமும் இப்போது தினகரனுக்கு ஆதரவாக இல்லை.

sasikala supporters-turned-against-dinakaran

அதிமுகவை காப்பாற்ற, இரட்டை இலை சின்னத்தை மீட்க, மத்திய அரசின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க, சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில், சசிகலா விசுவாசிகளே அவருக்கு எதிராக திரும்பி உள்ளனர்.

இதனால், எதுவும் செய்ய முடியாமல் திணறி வருகிறார் தினகரன். உச்ச கட்ட ராஜ தந்திரம் தனக்கு தானே குழி பறிக்கும் என்பது, சசிகலா வாழ்க்கையில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதே அரசியல் நோக்கர்கள் கருத்து.

Follow Us:
Download App:
  • android
  • ios