sasikala silence fasting stunt

சிறையில் இருக்கும் சசிகலா கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மௌன விரதம் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஆர்.கே.நகரில் வெற்றி பெற்ற பிறகு, பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவை சந்தித்து அதை தெரிவிப்பதற்காக தினகரன் சென்றார். சசிகலாவுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் தினகரன் கூறியபிறகுதான் சசிகலா மௌன விரதம் இருக்கும் விஷயம் தெரியவந்தது. 

ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவுதினத்தை முன்னிட்டு சசிகலா மௌனவிரதம் இருந்துவருவதாக தினகரன் தெரிவித்தார். தன்னிடம் சில விஷயங்களை எழுதி மட்டும் காட்டியதாகவும் தினகரன் தெரிவித்தார். ஆனால், தனிக்கட்சி, சசிகலா குடும்பத்தில் நிலவும் பனிப்போர் ஆகியவை குறித்து தினகரனுடன் சுமார் அரை மணி நேரம் பேசியதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல, சிறையில் இளவரசியுடனும் சசிகலா பேசுவதாக கூறப்படுகிறது. ஆனால் மௌன விரதத்தை காரணமாக காட்டி ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை கமிஷன், வருமான வரித்துறை விசாரணை ஆகியவற்றை தட்டி கழித்து வருகிறார் சசிகலா. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் உள்ள சசிகலாவின் அறையில் லேப்டாப் மற்றும் பென் டிரைவ்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர்.

இதுதொடர்பாகவும் சசிகலா குடும்பத்தினர், உறவினர்களின் வீடுகளில் நடந்த சோதனையின் விசாரணை, விசாரணை கமிஷனின் விசாரணை ஆகியவற்றை மௌன விரதத்தை காரணம் காட்டி விசாரணையிலிருந்து தப்புகிறார் சசிகலா. ஆனால் சிறையில் இளவரசியுடன் பேசுவதாகவும் தினகரனுடன் பேசியதாகவும் கூறப்படுகிறது.

எனவே விசாரணையிலிருந்து தப்புவதற்காகவே மௌன விரத ஸ்டண்ட் நடத்துவதாகவும் கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ம் தேதி வரை மௌன விரத ஸ்டண்ட் தொடரும் எனவும் கூறப்படுகிறது.

ஜெயலலிதாவின் மரணம் குறித்து சசிகலாவின் தம்பி திவாகரன் ஒரு கருத்தை கூறி சர்ச்சையை கிளப்ப, அதை தினகரன் மறுத்தார். இப்படி ஆளாளுக்கு ஒரு கருத்தை கூறி பிரச்னையை கிளப்புவதால் அமைதியாக இருப்பதுபோன்று நடிப்பதே மேல். அப்போதுதான் சர்ச்சைகளை தவிர்க்க முடியும் என்பதற்காக மௌன விரதம் இருக்கிறாரோ என அரசியல் நோக்கர்கள் கேள்வி எழுப்புகின்றனர். எது எப்படியோ சசிகலா மௌனம் கலைந்தால் மட்டுமே பல சர்ச்சைகளுக்கு பதில் கிடைக்கும்.