நேற்று மாலை திடீரென போயஸ் கார்டனுக்கு வந்த ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் அங்குள்ள பழைய ஜெ ஜெ டிவி அலுவலக கட்டிடம் தனக்கே சொந்தம் என்று கூறி ஆவணங்களை கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

அதிமுகவை இரண்டாக உடைத்து சசிகலாவை ஓரம்கட்டி அவரை சிறையில் அடைத்து அந்த கட்சி மன்னார்குடி வகையறாக்கள் வசம் சென்றுவிடக்கூடாது என்பதற்காக கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழகத்தில் ஒரு லாபி செயல்பட்டு வருகிறது. டெல்லியில் ஆளும் தரப்புடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் இந்த லாபி தமிழகத்தில் அதிமுகவில் செல்வாக்குள்ள சிலர் மூலமாக இந்த விஷயத்தில் ஏறத்தாழ வெற்றிபெற்றுவிட்டது. ஜெயலலிதாவின் வாரிசு சசிகலா இல்லை என்பதை நிரூபிக்கவும் இந்த லாபி இப்போதும் கூட இரவு பகலாக பணியாற்றி வருகிறது.

ஆனால் ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை தான் தான் தொடர்வேன் என்று சபதம் போட்டு சிறைக்கு சென்றுள்ளார் சசிகலா. மிக விரைவில் பெங்களூர் சிறையில் இருந்து வெளியே வருவது உறுதியாகிவிட்டது. சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டிற்கு சென்றுவிடக்கூடாது என்பதற்காக கடந்த நான்கு ஆண்டுகளாகவே தமிழக அரசு காய் நகர்த்தி வருகிறது. இதற்காகவே அவசர சட்டம் போன்று ஜெயலலிதாவின் வீட்டை நினைவில்லமாக மாற்றும் நடவடிக்கையை தமிழக அரசு எடுத்து வருகிறது.

ஆனால் ஜெயலலிதாவின் சந்தியா இல்லம் இல்லை என்றாலும் போயஸ் கார்டனில் தான் நான் தங்குவேன் என்று சசிகலா உறுதிபடத் தெரிவித்துவிட்டதாக சொல்கிறார்கள். இதனால் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் அருகே உள்ள ஜெ ஜெ டிவியின் பழைய அலுவலகத்தில் சசிகலாவை தங்க வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஜெயலலிதாவின் வீட்டை ஒட்டினால் போல் இருக்கும் இந்த கட்டிடத்தை ஒரு காலத்தில் ஜெ ஜெ டிவி அலுவலகமாக பயன்படுத்தினார்கள். தற்போதும் கூட இந்த கட்டிடம் ஜெயா டிவியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

நேற்று மாலை திடீரென சிவப்புக் கலர் ரேஞ்ச் ரோவர் கார் ஒன்று இந்த பழைய ஜெயா டிவி அலுவலகத்தின் முன் வந்து நின்றது. கார் வேகமாக வந்ததால் பதறிப்போன போலீசார் காருக்குள் யார் என்று பார்த்த போது உள்ளே ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் இருந்தார். காரில் இருந்து வெளியே வந்த அவர் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் வீட்டிற்குள் தான் நுழையப் போகிறார் என நினைத்து போலீசார் தடுத்து நிறுத்தினர். அதற்கு தான் ஜெயலலிதா வீட்டிற்கு வரவில்லை என்றும் அதற்கு அருகாமைல் உள்ள பழைய ஜெயா டிவியின் அலுவலகத்திற்கு வந்திருப்பதாக தீபக் பதில் அளித்துள்ளார்.

அப்போது அங்கு ஒரே ஒரு காவலாளி மட்டுமே இருந்த நிலையில் தீபக்கை உள்ளே விட மறுத்ததாக கூறப்படுகிறது. அற்கு உயர்நீதிமன்ற உத்தரவு என்று நகல் ஒன்றை கொடுத்து இந்த கட்டிடம் தனக்கு சொந்தமானது என்று தீபக் வாக்குவாதம் செய்தார். இதனை அடுத்து அலுவலகத்திற்குள் செல்வதற்கான பஞ்சாயத்தை காருக்குள் வைத்தே போலீசார் முடித்தனர். பிறகு உள்ளே சென்றுவிட்டு உடனடியாக வெளியே வந்தார் தீபக். மேலும் அங்கிருந்து ஜெயா டிவி தனது பொருட்களை உடனடியாக எடுத்துச் செல்ல வேண்டும் என்று தீபக் கூறிச் சென்றதாக சொல்கிறார்கள்.

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பழைய ஜெயா டிவி அலுவலகம் ஜெயலலிதா பெயரில் உள்ளதால் அது தங்களுக்கு சொந்தம் என்று தீபக் உரிமை கோரியுள்ளார். மேலும் அங்கு இனி ஜெயா டிவி தொடர்புடைய எதுவும் இருக்க கூடாது என்று அவர் எச்சரித்துவிட்டு சென்றதாகவும் சொல்கிறார்கள். இதன் பின்னணியில் சசிகலாவிற்கு எதிரான லாபி இருப்பதாக கூறுகிறார்கள். சசிகலா போயஸ் கார்டனுக்குள் வந்துவிடக்கூடாது என்பதற்காக தீபக்கை அந்த லாபி தூண்டிவிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனிடையே ஜெயா டிவி அலுவலகத்தை காலி செய்யுமாறு நீதிமன்றத்திற்கு செல்லவும் தீபக்கை அந்த லாபி தூண்டிவிடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.