சிறையில் இருக்கும் சசிகலா 2021ல் நடக்க இருக்கும் சட்டமன்றத்தேர்தல் வரை விடுதலையாகக் கூடாது என பாஜக திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.  

சசிகலா ரூ.1,500 கோடிக்கு பினாமி பெயர்களில் சொத்துக்கள் வாங்கியிருப்பது பற்றி வருமான வரித்துறைக்கு அடுத்தடுத்து ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்களின் வீடுகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சொத்துக்களை முடக்கி இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதேபோல கடந்த ஓரிரு நாட்களாக சசிகலா சுடிதாரில் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் பகிரப்பட்டன.

 

திடீர் திடீரென சசிகலா பற்றிய திடுக்கிடும் தகவல்கள் கசியவிடப்பட்டு வருவதற்கு பின்னணியில் வலுவான உள்குத்தல் இருப்பதாக கூறுகிறார்கள். 2017 பிப்ரவரி மாதம் நான்காண்டுகள் தண்டனை பெற்று சிறை சென்றார் சசிகலா. அவர் அடுத்த ஆண்டு மத்தியில் விடுதலையாகலாம் என்று சொல்லப்படுகிறது.

அப்படி இல்லாவிட்டாலும் 2021 பிப்ரவரியில் அவர் முழுதண்டனைக் காலத்தை முடித்து வெளியே வருவார். அந்த ஆண்டு நடக்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் முக்கிய நபராக இருப்பார். அப்படி இருப்பது பாஜகவுக்கு ஆபத்து. அதனால் 2021 பிப்ரவரியில் அவர் வெளிவருமுன்பே வேறு வழக்குகளில் அவரை கைது செய்து தொடர்ந்து சிறையிலேயே இருக்க வைக்க பாஜக முயல்வதாகக் கூறப்படுகிறது.