ஓபிஎஸ்-ஈபிஎஸ் என இரு தரப்பினரும் தனித்தனியாக நடத்திவரும் ஆலோசனை அதிமுகவினரிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக, அமமுக மீண்டும் இணைக்க வேண்டும் என்று சட்டமன்ற தேர்தல் நேரத்தில் அதிமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்திய பாஜக வலியுறுத்தி வந்தது. இது தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷா இரு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினார். ஆனால் இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஓகே சொன்னாலும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஒத்துக்கொள்ளவில்லை, அதிமுகவில் சேர்க்க வேண்டாம் கூட்டணியிலாவது அமமுக இணைக்க வேண்டும் என பாஜக கூறியது, இதனையும் எடப்பாடி பழனிசாமி கேட்கவில்லை இதனால் அதிமுக ஓட்டுகள் இரண்டாக பிளவு பட்டு தென் மாவட்டங்களில் அதிமுக வாக்குகள் வாங்க முடியாமல் தோல்வி அடைந்தது. இதனால் ஆட்சி அதிகாரத்தை அதிமுக இழந்தது.

கொங்கு மண்டலத்தில் மட்டும் பரவலாக வெற்றியைப் பெற்ற அதிமுக, தென் மாவட்டங்களில் முழுமையாக வெற்றி வாய்ப்பை இழந்தது அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தனது சொந்த மாவட்டத்தில் போராடி தான் வெற்றி பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. தென் மாவட்டங்களில் சசிகலாவின் சமுதாயம் அதிகமாக இருப்பதன் காரணமாக தான் அதிமுக வாக்குகள் அதிமுகவிற்கு செல்லாமல் மாற்று அணிக்கு சென்றதாக கூறப்பட்டது. இதனையடுத்து அடுத்து நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியதால் அதிமுக அமமுக இணைப்பது குறித்து வெளிப்படையாகவே கட்சி நிர்வாகிகள் பேச ஆரம்பித்துள்ளனர் இந்த நிலைதான் தேனி மாவட்ட அதிமுகவினர் சார்பாக ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில்.சசிகலாவை, தினகரன் கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.இதனையடுத்து நேற்று தேனியில் உள்ள பண்ணை வீட்டில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் முன்னாள் அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

