அடுத்த மாதம் சசிகலா விடுதலை ஆன உடன் அமைச்சர்களில் மூன்று பேரும் எம்எல்ஏக்களில் 5 பேரும் அவரை நேரில் சென்று சந்திக்க வாய்ப்புள்ளதாக உளவுத்துறை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நோட் போட்டு அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கட்சியை தினகரனிடமும் ஆட்சியை எடப்பாடி பழனிசாமியிடமும் கொடுத்துவிட்டு சொத்து குவிப்பு வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க சசிகலா பெங்களூர் சிறைக்கு சென்றார். அதற்கு முன்னதாக ஜெயலலிதா சமாதிக்கு சென்று அங்கு சபதம் ஒன்றை மேற்கொண்டு சசிகலா ஜெயிலுக்கு போனார். அதாவது, மீண்டும் வந்து முதலமைச்சர் பதவியை ஏற்பேன் என்பது தான் அந்த சபதம். ஆனால் ஜெயலலிதா சிறைக்கு சென்ற அடுத்த ஆறு மாதங்களில் நிலமை தலைகீழாக மாறியது.

கட்சி தினகரன் வசம் இருந்து எடப்பாடி வசம் சென்றது. எடப்பாடியும் – ஓபிஎஸ்சும் இணைந்து ஆட்சியை நடத்தி வருகின்றனர். அதாவது சுருக்கமாக சொல்லப்போனால் சசிகலா கொடுத்துச் சென்ற அதிமுக தற்போது அவர் வசம் இல்லை. அரசும் கூட முழுக்க முழுக்க எடப்பாடி பழனிசாமி வசம் சென்றுவிட்டது. இதனால் சசிகலா சிறையில் இருந்து திரும்பிய பிறகு அதிகாரத்தை பிடிக்க மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். சசிகலா சிறைக்கு சென்ற போது அதிமுக பொதுச் செயலாளராக அவர் இருந்தார். ஆனால் பொதுக்குழுவை கூட்டி ஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்து சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விடுவித்தனர்.

இருந்தாலும் தற்போது வரை சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கவில்லை. ஓபிஎஸ் தரப்பு எவ்வளவோ முயன்றும் சசிகலா அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக நீடிக்கிறார். அந்த உரிமையை சசிகலாவிடம் இருந்து கடைசி வரை எடப்பாடி பறிக்கவில்லை. இதனால் சசிகலா ஜெயிலில் இருந்து திரும்பியதும் அதிமுகவில் தான் இழந்த உரிமையை மீட்க காய் நகர்த்துவார் என்கிறார்கள். இந்த நிலையில் சசிகலாவிடம் தற்போது வரை அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சிலர் விசுவாசம் காட்டிவருவதாக கூறுகிறார்கள். இவர்கள் டிடிவி தினகரனுடன் தொடர்பில் இருப்பதாகவும் சசிகலா விடுதலைக்காக காத்திருப்பதாகவும் சொல்கிறார்கள்.

இதனை அடுத்து வட மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர், காவிரி டெல்டாவில் ஒரு அமைச்சர், தென் மாவட்டத்தை சேர்ந்த ஒரு அமைச்சரை உளவுத்துறை கண்காணிப்பதாக சொல்கிறார்கள். சசிகலாவுக்கு மிகவும் நெருக்கமாக இருந்த இவர்கள் எடப்பாடியுடனும் நெருக்கமாக இருந்து வந்தாலும் சசிகலாவைத்தான் தேடிச் செல்வார்கள் என்கிறார்கள். இதே போல் எம்எல்ஏக்களில் ஐந்து பேரும் கூட சசிகலாவின் ஆதரவாளர்களாகவே நீடிப்பதாகவும் கூறுகிறார்கள். இவர்களும் சசிகலா விடுதலையை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

எனவே அந்த அமைச்சர்கள் மற்றும் 5 எம்எல்ஏக்களை உளவுத்துறை நிழலாய் கண்காணிப்பதாக கூறுகிறார்கள். சசிகலா வரும் போது ரஜினி கட்சி ஆரம்பித்துவிடுவார் என்பதால் ஊடக வெளிச்சம் சசிகலாவுக்கு குறைவாகவே இருக்கும் என்பது எடப்பாடியின் கணக்கு. ஆனால் ரஜினி கட்சி பரபரப்பு குறைந்த பிறகு அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்களை தன்னை தேடி வரவழைத்து சட்டப்பேரவை தேர்தலுக்கான களத்தில் இறங்க சசிகலா வியூகம் வகுத்திருப்பதாக சொல்கிறார்கள்.எனவே அமைச்சர்கள் மூன்று பேர், எம்எல்ஏக்கள் ஐந்து பேர் தவிர வேறு யாரும் சசிகலாவை நாடிச் செல்லாமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ? அதை தற்போது முதலே எடப்பாடி பழனிசாமி தரப்பு செய்ய ஆரம்பித்துவிட்டது என்கிறார்கள்.