ஜெயலலிதா இருந்தபோது அந்த மோடியா? இந்த லேடியா என ஜெயலலிதா குரல் எழுப்பினார். ஆனால் ஒட்டுமொத்தமாக இன்றைக்கு மோடியிடமே எல்லாவற்றையும் அடகு வைத்து விட்டனர் என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

சிதம்பரத்தில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற நிகழ்ச்சி பொதுக்கூட்டம் நடந்தது.  திமுகவின் முன்னாள் அமைச்சரும் கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், திமுகவின் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது, அவர் பேசுகையில்;- கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக, பாஜகவை ஓட ஓட விரட்டி அடித்து துரத்தினீர்கள். அதே போல இந்த தேர்தலிலும் அவர்களை ஓட ஓட விரட்டி 234 தொகுதிகளிலும் திமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

அதிமுகவின் அனைத்து மட்டத்திலும் ஊழல் மலிந்து விட்டது. முதல்வர் எடப்பாடியின் சம்பந்திதான் அனைத்து கான்டிராக்டுகளையும்  எடுக்கிறார். சேலம் எட்டு வழி சாலையில் திட்டத்தில் ஊழல் முறைகேடு நடந்துள்ளது. நம்மை விட மோசமானவன் என நினைத்து கொரோனாவே இந்த ஆட்சியைப் பார்த்து பயந்து ஓடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை நீட் தேர்வை அனுமதிக்கவில்லை. ஆனால் அவர் இறந்தவுடன் நீட்தேர்வு வந்து விட்டது. அரியலூர் அனிதா நீட் தேர்வால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். அது தற்கொலை அல்ல. அதிமுகவும், பாஜகவும் சேர்ந்து செய்த கொலை. இதுவரை 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வால் இறந்துள்ளனர்.

மேலும், சசிகலா விடுதலையாகி வெளியே வந்து எடப்பாடிக்கு ஆப்பு அடிப்பார். நீங்கள் தேர்தலில் அவர்களுக்கு ஆப்பு அடிக்க வேண்டும். தற்போது உள்ள அதிமுக, பாஜக, ஜெயலலிதா, சசிகலா என 3 பேருக்குமே உண்மையாக இல்லை. ஜெயலலிதா இருந்தபோது அந்த மோடியா? இந்த லேடியா என ஜெயலலிதா குரல் எழுப்பினார். ஆனால் ஒட்டுமொத்தமாக இன்றைக்கு மோடியிடமே எல்லாவற்றையும் அடகு வைத்து விட்டனர். இந்த கேடு கெட்ட ஆட்சியை அகற்ற வேண்டும் என ஆவேசமாக கூறியுள்ளார்.