பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவின் 4 ஆண்டுகால சிறைத் தண்டனை முடிவடைய உள்ள நிலையில், நீதிமன்றம் விதித்த ரூ.10.10 கோடி அபராதத் தொகையை செலுத்தி விட்டதால் அவர் விரைவில் விடுதலையாவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

1991-96 அதிமுக ஆட்சிக் காலத்தில் நடந்த ஊழல் குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் மீது சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு தண்டனை மற்றும் ரூ 100 கோடி அபராதமும், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு 4 ஆண்டு தண்டனையும் தலா ரூ.10 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார். 

இந்த தண்டனையை எதிர்த்து பெங்களுரு உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் அப்பீல் செய்யப்பட்டதில், அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்தார். நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசுத் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், 2016 டிசம்பரில் ஜெயலலிதா மரணமடைந்தார். மேல்முறையீட்டில், 2017 பிப்ரவரியில் உச்சநீதிமன்றம் அதிரடியாக வழங்கிய தீர்ப்பில், பெங்களூரூ சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது.

ஜெயலலிதாவுக்கும் தண்டனை உறுதி செய்யப்பட்டாலும், அவர் இறந்து விட்ட காரணத்தால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் 4 ஆண்டு தண்டனைக் காலம் முடிவடையும் நிலையில், சசிகலா விடுதலை தொடர்பாக சில தேதிகளை குறிப்பிட்டு கடந்த சில மாதங்களாகவே பரபரப்பான தகவல்கள் வெளியாவதும், பின்னர் அது உண்மையில்லை என்பதுமாகவே உள்ளது. இறுதியாக முழு தண்டனை காலம் முடிந்து அடுத்தாண்டு ஜனவரி 27 அல்லது 28-ந் தேதி சசிகலா விடுதலையாவார் என சிறைத்துறை தரப்பிலேயே தகவல் கசிந்துள்ளது.

இதனிடையே, சசிகலாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையான ரூ.10 கோடியே 10 லட்சத்தை அவருடைய தரப்பு வழக்கறிஞர் முத்துக்குமார், பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதிமன்ற பதிவாளரிடம் இரண்டு வங்கி வரைவோலைகள் (டிராப்ட்) மூலமாக செலுத்தப்பட்டு அதனை நீதிபதி சிவப்பா ஏற்றுக் கொண்டு விட்டதாகவும் தகவல் வெளியான நிலையில், சசிகலா முன்கூட்டி விடுதலை ஆவாரா? அல்லது ஜனவரி இறுதியில் தான் வெளிவருவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.