‘எம்.பி.சசிகலா புஷ்பாவை 3 ஆவதாக திருமணம் செய்து கொண்டது ஏன் என்பது குறித்து அவரது கணவரும் சட்ட ஆலோசகருமான ராமசாமி விளக்கம் அளித்துள்ளார்.

அ.தி.மு.க. எம்.பி. சசிகலா புஷ்பாவுக்கு நேற்று முன்தினம் டெல்லியில் 2-வது திருமணம் நடைபெற்றது. அவர் எம்.பி.க்களுக்கு சட்ட ஆலோசகரான பி.ராமசாமியை திருமணம் செய்து கொண்டார். ராமசாமிக்கு, சசிகலா புஷ்பா 3-வது மனைவி.

இந்த திருமணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து ராமசாமி செய்தியாள்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் என்னுடைய முதல் மனைவியும், மகனும் விபத்தில் இறந்து விட்டனர். நானும், என் மகளும் உயிர் பிழைத்தோம். இதனால் என் மகளை கவனிப்பதற்காக சத்யப்பிரியாவை 2-வதாக திருமணம் செய்தேன். அவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்ததை மறைத்து விட்டார்.

சத்யப்பிரியா என் மகளை கொடுமைப்படுத்தினார். அவருடைய தம்பி என் மகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். இது தொடர்பாக டெல்லி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். நான் சிம்லாவில் பணியாற்றியபோதும் என் மகள் மீதான துன்புறுத்தல் தொடர்பாக சிம்லா போலீசிலும் புகார் அளித்துள்ளேன். பின்னர் சத்யப்பிரியாவை விட்டு விலகினேன். மகளின் பாதுகாப்புக்காக சசிகலா புஷ்பாவை மறுமணம் செய்ய விரும்பினேன்.

இதற்கிடையே, சத்யப்பிரியாவின் முதல் கணவர் திண்டுக்கல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து மனைவி தனக்கே சொந்தம் என்று வாதிட்டு உரிமை பெற்றார். இந்த உத்தரவை காட்டி தான் சசிகலா புஷ்பாவை நான் திருமணம் செய்துகொள்ள மதுரை கோர்ட்டில் உத்தரவு பெற்றேன். சசிகலா புஷ்பாவும் அவருடைய கணவரை சட்டப்படி விவாகரத்து பெற்றிருந்தார். எனவே, நானும், சசிகலா புஷ்பாவும் சட்டப்படி தான் மறுமணம் செய்து கொண்டோம் என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய சசிகலா புஷ்பா, .நான் விவாகரத்து செய்துவிட்டு, மறுமணம் செய்துள்ளேன். தமிழக அரசு என் மீது தொடர்ந்த வழக்குகளை எதிர்கொள்ள கடந்த ஒரு ஆண்டாக ராமசாமி எனக்கு உதவினார். எனவே, அவரது பிரச்சினைகள் அனைத்தும் எனக்கு தெரியும்.

சத்யப்பிரியா குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு அழுதுகொண்டே ஓடியதை டி.வி.யில் பார்த்தேன். இதை பார்க்கும்போது எல்லோருக்குமே கஷ்டமாகத்தான் இருக்கும். எனக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. அந்த குழந்தையை என்னிடம் வாங்கி தாருங்கள், நான் வளர்க்கிறேன் என்று ராமசாமியிடம் பலமுறை சொல்லி இருக்கிறேன். இதற்கு மேல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிவித்தார்..

சத்யப்பிரியாவை சில அரசியல்வாதிகள் இயக்குகிறார்கள் என்றும் தற்போது நான் டி.டி.வி.தினகரன் அணியில் இருக்கிறேன். அதனால் எதிர்தரப்பில் இருந்து எனக்கு நெருக்கடி வருகிறது என்று சசிகலா புஷ்பா எம்.பி. தெரிவித்தார்..