சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 1991 – 1996 ஆம் ஆண்டில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டு சிறை தண்டனையும் ஜெயலலிதாவிற்கு 100 கோடி ரூபாய் அபராதமும், மற்ற மூவருக்கு தலா 10 கோடி ரூபாயும் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கியது.

இதை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி குமாரசாமி 4 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதையடுத்து ஜெயலலிதா காலமாகிவிட்டார். பின்னர், இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் கீழ் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தது. இதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க சசிகலா தரப்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த மனு விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கபடுகிறது.