நுரையீரல் தொற்று காரணமாக குளோபல் மருத்துவமனையில் உயிரிழந்த கணவர் நடராஜனின் இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக 15 நாட்கள் பரோல் கோருகிறார் சசிகலா. 

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் பிப்ரவரி 15, 2017 முதல் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா கடந்த அக்டோபர் மாதத்தில் நடராஜனுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை செய்யப்பட்ட போது அவரை பார்த்துக் கொள்வதற்காக 5 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது. 

இந்நிலையில், சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த 16ம் தேதி இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுளளார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வந்தது. 

இதையடுத்து சசிகலாவுக்கு பரோல் கேட்டு ஓரிரு நாட்களில் மனு தாக்கல் செய்யப்படும் என்று வழக்கறிஞர் அசோகன் தெரிவித்திருந்தார். பரோல் பெறுவதில் சட்ட சிக்கல் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். 

ஆனால் சசிகலா கணவர் நடராஜன் உடல்நலக்குறைவு காரணமாக நள்ளிரவு 1.35 மணிக்கு உயிரிழ்ந்தார். இந்நிலையில், கணவரின் இறுதி சடங்கில் பங்கேற்க 15 நாட்கள் சிறை விடுப்பு கோருகிறார் சசிகலா. 

காலை 8.30 மணிக்கு பரோல் மனுவில் சசிகலாவின் கையெழுத்தை பெறுகின்றனர் வழக்கறிஞர்கள். பரோல் மனுவுடன் நடராஜனின் இறப்பு சான்றிதழும் இணைத்து சிறைத்துறையிடம் வழங்கப்படும்

மனு கிடைத்தவுடன் பெங்களூரு சிறை கண்காணிப்பாளர் பரோல் வழங்குவார் என தெரிகிறது. இதனைத் தொடர்ந்து உடல்பரிசோதனைக்குப் பின்னர் சசிகலா சிறை விடுப்பில் வெளிவருவார் என்று தெரிகிறது.