அதிமுகவில் புதிய உறுப்பினராக சசிகலா சேர்க்கப்படவில்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதிமுகவில் இணைந்த புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ் அதிமுக ஒரு எஃகு கோட்டை என்றார். 1.3.2018 முதல் 31.5.2018 ஆகிய காலக்கட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டன. அதில் 43 லட்சத்து 81 ஆயிரம் விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டு 1 கோடியே 10 லட்சத்து 41 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு உள்ளனர். நடப்பாண்டில் 60 லட்சம் உறுப்பினர் சேர்ந்துள்ளனர். உறுப்பினர் சேர்க்கை தொடர்ந்து நடைபெறும் என்றார். 

அதிமுகவில் புதிய உறுப்பினராக சசிகலா சேர்க்கப்படவில்லை என்றார். மேலும் தினகரனுடன் சென்ற சொற்பமானவர்கள் மட்டுமே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். தினகரனுக்கு ஆதரவாக உள்ள 3 எம்.எல்.ஏ.க்களுக்கு விளக்கம் கேட்டு அனுப்பப்பட்டு உள்ளது. விளக்கத்தின் அடிப்படையில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.