பிரம்மாண்ட பொருட்செலவில் நிகழ்ச்சி நடத்தும் திமுக..! குடிசையில் வாழும் மக்களுக்கு எந்த பயனும் இல்லை- சசிகலா
திமுக அரசு தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்தி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக அறிவித்து இருப்பது தமிழக மக்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய அநீதி இது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். இது மிகவும் கண்டனத்திற்குரியது என சசிகலா தெரிவித்துள்ளார்.
மின் கட்டண உயர்வு
மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு பொறுப்பேற்றுக் கொண்டு பதினைந்து மாதங்கள் ஆகிவிட்டது. இவர்களால் மக்களுக்கு எந்தவித பயனும் இதுவரை ஏற்படவில்லை. நாள்தோறும் மேடைகளில் வசனம் எழுதி வைத்துக்கொண்டு பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இல்லையென்றால் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக திரைப்படம் எடுப்பது போன்று எதாவது நிகழ்ச்சிகளை நடத்தி அவர்கள் குடும்பத்தினரை மகிழ்விக்கிறார்கள். இது போன்ற செயல்களால் ஏழை எளிய மக்கள், குடிசையில் வாழ்த்து கொண்டு. போராடுகிறவர்களுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை. ஏற்கனவே வரலாறு காணாத அளவுக்கு 150 சதவிகிதம் சொத்துவரி உயர்வு, ஆவின் பால் பொருட்களின் உயர்வு போன்ற தமிழக மக்களுக்கு விரோதமான நடவடிக்கைகளை தொடர்த்து எடுத்து வருவதால் ஏழை எளிய சாமானிய மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இந்த நிலையில் மின் கட்டண உயர்வும் இன்று முதல் அமலுக்கு வந்து இருப்பது மக்களை மேலும் துன்பத்திற்கு ஆளாக்கியிருக்கிறது.
மின் கட்டணம்- பொதுமக்கள் பாதிப்பு
திமுக அரசு இது வரை தடைமுறையில் இருந்து வந்த மின் கட்டணத்தை விட தற்பொழுது அதிகபட்சமாக 3 சதவிகிதம் வரை உயர்த்தி இருப்பது மிகவும் கொடுமையானது தமிழகத்தில் பெரும்பான்மையாக 63.35 சதவிகித மக்கள் 200 யூனிட்டுகள் வரை பயன்படுத்துகின்ற ஏழை எளிய சாதாரண மக்களுக்கு அவர்களால் தாங்கிக்கொள்ள முடியாத வகையில் 32 சதவிகித அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதாவது 200 யூனிட்டுக்கு இதுவரை 170 ரூபாய் செலுத்திவந்த நிலையில் தற்போது 225 ரூபாய் மின்கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோன்று, 500 யூனிட் வரை பயன்படுத்துகிறவர்கள் இதுவரை மின்கட்டணமாக 1130 ரூபாய் செலுத்திவந்த நிலையில் தற்பொழுது 1725 ரூபாயாக $3 சதவிகிதம் கூடுதலாக மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, கொரோனாவால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை எளிய மக்களால், எவ்வாறு இந்த திமுக அரசால் அமல்படுத்தியுள்ள வரலாறு காணாத மின்கட்டண உயர்வை சமாளிக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை.
லாப நஷ்டத்தை பார்க்க கூடாது
வீடுகளுக்கே இந்த நிலைமை என்றால் வர்த்தக பயன்பாட்டினர், சிறு,குறு தொழில் நிறுவனத்தினரின் நிலைமை இன்னும் மோசமாக பாதித்துவிடும். தங்கள் தொழிலை விட்டுவிட்டு செல்லக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோமோ என்று அச்சத்தில் இருக்கிறார்கள். அதே போன்று இதர தாழ்வழுத்த மின் நுகர்வோர்களுக்கும் அதிக அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக மொத்தமாக பயன்படுத்தக்கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஒரு யூனிட்ரூபாய் 4.60 ஆக இருந்த மின்கட்டணம் தற்பொழுது இரு மடங்கு அளவுக்கு 8,00 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. மேலும் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள், மென்பொருள் நிறுவனங்கள் பயன்படுத்துகிற உயர் மின்னழுத்த பயனாளிகளுக்கோ மின் கட்டணத்தோடு, கோரிக்கை கட்டணத்தை இருமடங்காக உயர்த்தி இருப்பது மிகவும் சிரமத்தை அளிக்கக்கூடும்.பொதுமக்களுக்கு சேவை அளிக்கின்ற வகையில் செயல்படவேண்டிய மின்சாரத்துறையோ, லாப நஷ்ட கணக்கு பார்ப்பது, மிகவும் வேதனையானது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக் காலத்தில் ஏழை எளிய மக்கள் பாதிக்கின்ற எந்தவித நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்ளவில்லை.
மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்
அதன் காரணமாகத்தான் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பேணிப் பாதுகாக்கப்பட்டது. அதே சமயம் அனைத்தையும் சமாளித்து, தமிழக மக்களுக்கு பயனளிக்கின்ற எண்ணற்ற தலத்திட்டங்களையும் கொடுத்து இருக்கிறோம். ஆனால், இன்றைய ஆட்சியாளர்களோ தமிழக மக்களை தொடர்ந்து துன்புறுத்தி வருவது மிகவும் வேதனை அளிக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக திமுக தலைமையிலான அரசு ஆண்டுதோறும் 6 சதவிகிற அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தும் வகையில் அனுமதி பெற்று இருப்பதாக வரும் செய்திகள் தமிழக மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எனவே, இன்று அமல்படுத்தியுள்ள மின்கட்டணத்தை திமுக தலைமையிலான அரசு உடனே திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மேலும், இந்த ஆட்சியாளர்கள் இதுபோன்ற மக்கள் விரோத போக்கை கைவிட்டுவிட்டு தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பேணிக் காக்க ஏதாவது ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக சசிகலா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
கடந்த ஆட்சியில் போராட்டம்.. இப்போது மின் கட்டண உயர்வு.. இதுதான் விடியல் ஆட்சியா? சீமான் ஆவேசம்!