சிறையில் சொகுசு வசதிகளைப் பெற சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் சசிகலாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில், 2017ல் தண்டனை பெற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப் பட்டு, 2021 ஜனவரியில் விடுதலையானார். சிறையில் இருக்கும் போது, அவருக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்ததாகவும், அதற்காக சிறை அதிகாரிகள், 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும், அப்போதைய சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா குற்றஞ்சாட்டினார். இந்த செய்தி அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

'சசிகலா சிறையில் இருந்த போது, அவருக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டது உண்மை' என்று கர்நாடக அரசு நியமனம் செய்த ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர் மட்ட குழுவும் அறிக்கை தாக்கல் செய்தது. இந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று, ஏ.சி.பி என்ற ஊழல் ஒழிப்பு போலீஸ் பிரிவில், 2018ல் புகார் அளிக்கப்பட்டது.

பின்னர், ஆழ்வார் பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா தொடர்ந்த வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ்.ஓகா அமர்வு முன் கடந்தாண்டு ஆகஸ்ட் 25ல், முதல்கட்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து சசிகலாவிடம் லஞ்சம் பெற்றதாக, தலைமை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், கண்காணிப்பாளர் அனிதா, போலீசார் சுரேஷ், கஜராஜ மகனுார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க, கர்நாடக அரசு அனுமதி வழங்கியது. 

இந்த சம்பவம் தொடர்பாக ஜனவரி 7ல் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதிகாரிகள் மற்றும் சசிகலா, இளவரசி ஆகியோர் குறித்து, குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. போலீஸ் அதிகாரி ரூபா குற்றஞ் சாட்டிய, அப்போதைய சிறைத்துறை டி.ஜி.பி சத்யநாராயண ராவ் குறித்து மட்டும், குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்படவில்லை என தெரிய வந்துள்ளது. 

மீண்டும் இந்த வழக்கு சூடுபிடித்து உள்ளதால், தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதுகுறித்து பேசிய ஐ.ஜி ரூபா, அரசின் எந்த அதிகாரியாக இருந்தாலும், சட்டத்திற்கு உட்பட்டு பணியாற்ற வேண்டும். லஞ்சம் பெற்றவர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். இந்த வழக்கில் உண்மை நிலைநாட்டப்படும் என்று நம்புகிறேன்’ என்று கூறினார்.