sasikala decides vivek jaytaraman to become as main posting at ADMK

அதிமுகவின் இரு அணிகளும் இணையுமா? இணையாதா? என்ற பட்டிமன்றங்கள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், ஓசை படாமல், வைத்திலிங்கத்தை பொது செயலாளராக்கும் முடிவை மேற்கொண்டுள்ளார் சசிகலா.

சசிகலா குடும்பத்தை அரசியலை விட்டே, ஒதுக்கினால் மட்டுமே, அணிகள் இணைப்பு பற்றி பேச முடியும் என்று கறாராக இருந்த பன்னீர் அணியின் பிடி, கொஞ்சம், கொஞ்சமாக தளர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

அதிமுகவின் செல்வாக்கு, மக்கள் மத்தியில் வேகமாக சரிந்து வருகிறது. மறுபக்கம், பன்னீருக்கு, முன்பிருந்து போல, தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்த்த ஆதரவு இல்லை என்றும் தெரிகிறது.

அத்துடன், பன்னீர் அணியில் உள்ள முக்கிய தலைவர்கள் மத்தியிலும், முரண்பாடு ஏற்பட்டு, அணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில், கூடிய விரைவில், அதிமுகவுடன் தமது அணியை இணைப்பதே, தமக்கும், தம்மை நம்பி வந்தவர்களுக்கும் பாதுகாப்பு என்று நினைக்கிறார் பன்னீர்.

அதனால், முதல்வர் மற்றும் பொது செயலாளர் பதவி இல்லை என்றாலும், அதிமுகவில் இணைவதே சிறந்தது என்று பன்னீர் முடிவு செய்துள்ளார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

இந்த சூழ்நிலையை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்த சசிகலா, எப்படியாவது இரட்டை இலை சின்னத்தை சிக்கல் இல்லாமல் மீட்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார்.

அதே சமயம், கட்சி மற்றும் ஆட்சியில் பன்னீரின் கை ஓங்கி விடாமல் இருக்கும் வகையில், வைத்திலிங்கத்தை கட்சியின் பொது செயலாளர் ஆக்கிவிட்டு, விவேக்குக்கு இளைஞர் அணி தலைவர் பதவியை வழங்க தீர்மானித்துள்ளார்.

தாமும், தினகரனும் கட்சியை விட்டு விலகி இருந்தாலும், வைத்திலிங்கம் மற்றும் விவேக் மூலம், தமது அதிகாரத்தை நிலைநாட்ட முடியும் என்பது சசிகலாவின் கணக்காக உள்ளது.

மேலும், கடந்த தேர்தலில் வைத்திலிங்கம் தோல்வி அடைவதற்கு காரணமாக இருந்த திவாகரனும், வைத்தி பொது செயலாளர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே, விவேக்கை ஏற்கனவே கடுமையாக எதிர்த்தார் பன்னீர். ஆனால், தற்போது, அந்த கோரிக்கையை கைவிட முடிவு செய்த பன்னீர், எப்படியாவது அணிகள் இணைப்பு நடந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்து விட்டார்.

எனவே, கூடிய விரைவில் அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து விடும் என்பதே, அதிமுக நிர்வாகிகள் மத்தியில் பேச்சாக உள்ளது.

எத்தனை அணிகள் இணைந்தாலும், இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைத்தாலும், ஜெயலலிதா போன்ற ஒரு மக்கள் தலைவர் இல்லாத குறை, அதிமுகவை எப்படி கரை சேர்க்கும் என்பதே இப்போதைய கேள்வி.