Sasikala cancels mgr birth centenary celebrations meeting at mannarkudi
மன்னார்குடியில் திவாகரன் நடத்த இருந்த எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு சசிகலா திடீரென தடை விதித்தால் அந்த நிகழ்ச்சி ஆகஸ்டு மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த விழா ரத்தானதை திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் தனது முகநூல் பக்கத்தில் உறுதி படுத்தியுள்ளார்.
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா, வரும் 15 ஆம் தேதி திவாகரன் மன்னார்குடியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அதிமுகவின் அதிகார மையமான திவாகரன் தனது வாரிசான ஜெய ஆனந்தை, வாரிசாக்க மன்னார்குடியில் பிரம்மாண்ட மேடை அமைத்து, எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.
இதற்காக மிகப் பிரம்மாண்டமான நுழைவாயில் அமைக்கும் பணியும், மேடை அமைக்கும் பணியும் நடைபெற்று வந்தன. மேலும் நூற்றுக்கணக்கான பேனர்களும், சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டிருந்தன.
சுவரொட்டிகளில் ஜெயலலிதா, சசிகலா மற்றும் எடப்பாடி பழனிசாமியின் படங்கள் சிறியதாகவும் திவாகரனின் படம் பெரியதாகவும் அச்சிடப்பட்டிருந்தது. அந்த பதாகை சுவரொட்டிகளில் மறக்காமல் ஜெய ஆனந்தின் படமும் இடம் பெற்றிருந்தன. ஆனால் திவாகரனின் படம் இடம் பெறவில்லை.
திவாகரனும், எடப்பாடி பழனிசாமியும் கைகோர்ப்பதை சசிகலா விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இந்த நிகழ்ச்சிக்க சசிகலா தடை விதித்ததாக கூறப்படுகிறது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ரத்து செய்யப்பட்டது குறித்து ஜெய் ஆனந்த் தனது பேஸ்புக் பக்கத்தில், திட்டமிட்டதைவிட மிகச் சிறப்பாகவும் பிரம்மாண்டமாகவும் நடக்க இருப்பதால் ஆகஸ்ட் மாதத்திற்கு விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் விழா நடக்கும் தேதி குறித்தும் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மன்னார்குடியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்கு தடைவிதிக்கப்பட்ட நேரத்தல், திருவாரூரில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மன்னார்குடியில் தினகரன் நடத்தவிருந்த விழா ரத்து செய்யப்பட்டதைப்போல ஓ.பி.எஸ். கூட்டத்துக்கும் அனுமதி ரத்து செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
