அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அவசர கூட்டத்தை அதிமுக பொது செயலாளர் சசிகலா இன்று கூட்டியுள்ளார். இதற்கான அழைப்பு அனைவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

அதிமுக பொது செயலாளராக இருந்த ஜெயலலிதா, தமிழகத்தின் முதல்வராகவும் பதவி வகித்து வந்தார். அவர் இருக்கும் வரை, அனைத்தும் தன்னுடைய தீர்மானத்தின்படி நடத்தி வந்தார். கட்சியும், ஆட்சியும் ஒரே தலைமையின் கீழ் இயங்கி வந்தது.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, முதலமைச்சராக பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டு தொடர்கிறார். கட்சி தலைமைக்கு பலத்த எதிர்ப்புக்கு இடையே சசிகலா, பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். ஜெயலலிதாவை முன்னிறுத்தியே கட்சியும், ஆட்சியும் தொடரும் என சசிகலா தனது உரையில் தெரிவித்து இருந்தார்.

முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் மாற்றப்பட வேண்டும். ச்சிகலாவே முதல்வராகவும் தொடரவேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சர்களே முன் வைத்தனர். பல இடங்களில் பேட்டி அளித்தனர்.

அமைச்சர்களே இவ்வாறு பேட்டி அளித்தால், முதல்வராக பன்னீர்செல்வம் எப்படி செயல்பட முடியும் என்ற விமர்சனம், தமிழகம் முழுவதும் எழுந்தது. மறுபுறம் அதிமுகவை கைப்பற்ற தீபா ஆதரவாளர்கள் முயன்று வருகின்றனர். சசிகலா முதல்வர் ஆவதற்கு மாநிலம் முழுவதும் கட்சி தொண்டர்கள், பொது மக்கள் மனநிலை எதிர்ப்பாக உள்ளதாக உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், சசிகலா முதல்வராக பதவியேற்பது குறித்து எந்த முடிவும் அதிமுக தலைமையால் எடுக்கப்படவில்லை. முதலமைச்சர் பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு பிரச்சனையில் மத்திய அரசுடன் பேசி, அவசர சட்டத்தை கொண்டு வந்ததால், அவருடைய செயல்பாடு பாராட்டப்படுகிறது.

முதல்வராக ஒ.பன்னீர்செல்வம், தமிழக மக்களால் அங்கீகரிக்க பட்டுள்ளதாக தெரிகிறது. அதிமுகவில் சசிகலாவின் எதிர்ப்பாளராக இருந்த தம்பிதுரை, திடீரென சசிகலா முதல்வராக வேண்டும் என தனது துணை சபாநாயகர் லெட்டர் பேடில் அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இது பலராலும் விமர்சிக்கப்பட்டது. இதனால் டெல்லியில் அவர் ஓரங்கட்டப்பட்டார்.

மறுபுறம் எம்.நடராஜன், மத்திய அரசு, மாநில அரசை நசுக்க நினைப்ப்பதாக கருத்து தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார். ஒருபுறம், கட்சியின் தலைவர் ஒ.பி.எஸ்., மத்திய அரசுடன் இணக்கமாக இருக்க, மறுபுறம் கட்சி தலைமைக்கு ஆதரவாக இருக்கும் தம்பிதுரை போன்றவர்கள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால், கட்சி ஆட்சி என இருவேறு கருத்துகள் தமிழகத்தில் இருந்து வருகிறது.

இதேபோல் மாநிலத்தில் ஜல்லிக்கட்டு விவகாரம், அதையொட்டி எழுந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு எதிராகவே, அதிமுகவில் சில முக்கிய புள்ளிகள் காய் நகர்த்தியதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

இந்த நிலையில் சட்டமன்றத்தில் மேற்கண்ட பிரச்சனைகள் எழும் நிலையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதில் பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன.

ஜெயலலிதா இருந்த வரையில் அதிமுகவில் இருந்த கட்டுப்பாடு, சட்டசபையில் தொடர வேண்டும் என்பதே அனைவரின் எதிர் பார்ப்பு.

இதேபோல், பல்வேறு பிரச்சனைகள் இடையே, பாராளுமன்ற கூட்ட தொடர், துவங்குகிறது. மத்திய அரசை எதிர்த்து, தம்பிதுரை கடுமையான கருத்துகளை கூறி பேட்டி அளித்த நிலையில், அதிமுக எம்பியின் செயல்பாடுகள், எவ்வாறு இருக்க வேண்டும் என்பதும் முக்கிய பிரச்சனை.

மேற்கண்ட அம்சங்கள் குறித்து பேசுவதற்காக அதிமுக பொது செயலாளர் சசிகலா தலைமையில், அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை 4 மணியளவில் கூடுகிறது. அதன்பின்னர், 5 மணியளவில் எம்பிக்கள் கூட்டம் நடக்கிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.