உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட சசிகலாவின் கணவர் ம.நடராசனுக்கு நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவரைக் காண பரோல் வேண்டி சசிகலா சிறைத்துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ளார்.

சசிகலாவின் கணவர் ம.நடராசன் கல்லீரல் மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சையும் மேற்கொண்டார். தாம்பரத்தை அடுத்துள்ள மேடவாக்கம் அருகே உள்ள மருத்துவமனையில் அவருக்கு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

ம.நடராசன், மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டபோது, அவரைப் பார்ப்பதற்காக, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலா பரோலில் வந்தார். சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வெடுத்து வந்த ம.நடராசனுக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ம.நடராசன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரைப் பார்ப்பதற்காக சிறையில் உள்ள சசிகலா, கணவரைப் பார்க்க பரோல் வேண்டி மனு ஒன்றை சிறைத்துறையில் அளித்துள்ளார். கணவரின் உடல் கவலைக்கிடமாக உள்ளதால், அவரைக்காண பரோல் வேண்டும் என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.