அன்னிய செலாவணி வழக்கில் சசிகலா காணொலி மூலம் ஆஜராவது குறித்து மே 4ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எழும்பூர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுக அம்மா கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா, துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக 1996-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  இவ்வழக்கில் நேரில் ஆஜராவதற்குப் பதில் காணொலி மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த அன்னிய செலாவணி வழக்கின் மீதான விசாரணை இன்று எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில்  நடைபெற்றது.

அப்போது சசிகலா காணொலி மூலம் ஆஜராவது குறித்து மே 4ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில்  சசிகலாவின் உறவினர் பாஸ்கரன் வரும் மே 4 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.