அக்ரஹாரா ஜெயிலில் டேரா போட்டிருக்கும் சின்ன மம்மியை சந்திக்க மாப்பிள்ளையும், மாமாவும் நேரம் கேட்டிருந்தார்கள். ஆனால், இருவரையும் இன்னும் சந்திக்காமல் தவிர்த்து வருகிறார் சின்ன மம்மி. ஆனால், எதிர்பாராமல் திடீரென இன்று பெங்களூரு புகழேந்தியை வர வழைத்துப் பேசியிருக்கிறார் சின்ன மம்மி.

பெங்களுரு புகழ் பார்த்ததுமே மருமகன் தினா, மாமா திவா வின் சண்டை பற்றிதான் பேசியிருக்கிறார் சின்ன மம்மி. ‘வெளியில் என்னதான் நடந்துட்டு இருக்குது? என்னத்துக்காக இப்போ அவரு கட்சி ஆரம்பிச்சிருக்காரு? ஆரம்பத்துல இருந்தே தினா நான் சொன்னதை கேட்கல. இப்போ திவாவும் என்கிட்ட கேட்கவும் இல்ல. அக்கா (ஜெயலலிதா) இருந்த வரைக்கும் இவங்க எல்லாம் எங்கே போனாங்க? யாரையும் கார்டன் பக்கம்கூட விடாமல் அக்கா விரட்டினாங்க.

இப்போ தினா, திவா ரெண்டு பேரும் ஏதோ அதிமுகவே எங்க பக்கம்தான் இருக்கு என்பது மாதிரி ஆடிட்டு இருக்காங்க. எடப்பாடி துரோகம் பண்ணிட்டாருன்னு இன்னைக்கு வாய் கிழிய பேசிட்டு இருக்காங்களே... இவங்களுக்கும் எடப்பாடிக்கும் என்ன வித்தியாசம் இருக்கு? இவங்களுக்கு எடப்பாடியே எவ்வளவோ மேல்னு எனக்கு தோணுது. அவராவது கட்சியை காப்பாத்தணும் என்பதற்காகத்தான் என்னை ஒதுக்கி வைக்கிறேன் என்றெல்லாம் பேசினாரு. இவங்க என்னை கூட வெச்சுகிட்டே கட்சியை காலி பண்ணது மட்டுமல்லாமல், பதவிக்காக இப்படி அடிச்சுக்குறாங்க. நான் அக்கா பையனுக்காக பேசுறதா...

தம்பிக்காக வக்காலத்து வாங்குறதா? நான் ஜெயில்ல இருக்கேன் என்பதை பத்தி இவங்க ரெண்டு பேருக்குமே கவலை இல்லை. அவங்க ரெண்டு பேருக்கும் பதவி தான் பிரச்சனை. அதுக்காகத்தான் எந்த லெவலுக்கும் போக ரெடியாகிட்டாங்க. ரெண்டு பேரும் என் குடும்பம்தான். அதே நேரத்துல, அரசியல்னு வரும் போது நான் யாரு பக்கமும் நிற்கவும் முடியாது. யாருக்கும் சப்போர்ட் பண்ணவும் முடியாது. என்னை பார்க்கணும்னு இப்போ ரெண்டு பேரும் துடியா துடிக்கிறாங்க. யாரையும் கூப்பிட்டு பேசவும் எனக்கு விருப்பம் இல்ல...’ என்று சொன்னாராம்.

அதற்கு பெங்களுரு புகழ், ‘நீங்க எந்தப் பக்கம் இருக்கீங்களோ அந்தப் பக்கம்தான் நாங்க இருப்போம்மா...’ என்று சொல்ல.. ‘நீங்க யாரும் எதுவும் அப்படியெல்லாம் பேசாதீங்க. யாரு எங்கே இருக்கீங்களோ அங்கேயே இருங்க. இன்னும் ரெண்டு வருசத்துல எதுவும் மாறலாம். என்னைப் பத்தி கழக உடன்பிறப்புகள் மத்தியில வாயில வராத கெட்ட வார்த்தையெல்லாம் சொல்லி தம்பி திவா திட்டியிருக்கான். எல்லாம் என்னோட கவனத்துக்கு வந்துட்டேதான் இருக்கு. ஜெயிலுக்குள்ள போகப் போறோம்னு தெரிஞ்சும் எதுக்காக அவ முதலமைச்சர் ஆகணும்னு ஆசைப்பட்டா? என்றெல்லாம் பேசியிருக்கான் திவா.

இவங்களை எல்லாம் எந்த முகத்தை வெச்சுகிட்டு என்னைப் பார்க்கச் சொல்றீங்க? புகழ் என ருத்ரதாண்டவம் ஆடிவிட்டாராம் சின்ன மம்மி. இது மட்டுமல்ல, சின்ன மம்மி சொன்ன இன்னொரு விஷயத்தை கேட்ட பெங்களுரு புகழுக்கு வேர்த்து வெள வேளத்து போயிடுச்சாம், அது என்னன்னா? ‘உங்களுக்கெல்லாம் தினா, திவாவும் என்னை பார்க்க முயற்சி செஞ்சதும்தானே தெரியும். எடப்பாடி மந்திரி சபையில இருக்குற முக்கிய மந்திரி ஒருத்தரே என்னை பார்க்க நேரம் கேட்டிருக்காரு. நான் இன்னும் பதில் சொல்லல.

நான் இப்போ சொன்னால் எடப்பாடி அணியில் இருக்கிற மந்திரியே என்னை பார்க்க தயாராக இருக்காங்க. குடும்பத்தை எல்லாம் தூக்கிப் போட்டுட்டு நான் மட்டும் போனால், எடப்பாடியும் சரி... தொண்டர்களும் சரி என்னை ஏத்துக்க ரெடி. இதெல்லாம் உங்களுக்குத் தெரியுமா?’ என சொன்னாராம். இதனால் ஷாக்கான புகழோ, ‘அப்படியெல்லாம் எதுவும் செஞ்சிடாதிங்கம்மா...’ என சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.

இந்தத் மேட்டர அப்படியே புகழ் உடனடியாக தினாவிடம் சொல்ல. அதைக் கேட்டதும் அளண்டுபோன தினாவோ. ‘எதுக்காக அவங்க இப்படியெல்லாம் பேசுறாங்க? எப்படியாவது நான் பார்க்கிறதுக்கு நேரம் கேளுங்க..’ என்று சொல்லியிருக்கிறார் தினா. தற்போது அதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார் புகழ்.