sasikala and ilavarasi advised dinakaran on rk nagar by election

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் போட்டியிட இருக்கும் நிலையில், நேற்று, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று சசிகலாவை நேரில் சந்தித்து பேசிவிட்டு வந்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவை கைப்பற்றுவது தொடர்பான போட்டியில் சசிகலா, தினகரன் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஒட்டுமொத்தமாக ஒதுக்கிவிட்டு பழனிசாமியும் பன்னீர்செல்வமும் இணைந்து வெற்றி கண்டுவிட்டனர் என்றே சொல்ல வேண்டும்.

தங்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு இருந்த கட்சியினரையும் கட்சியையும் இழந்ததற்குக் காரணம் தினகரன் தான் என சசிகலா கருதுவதாக சொல்லப்படுகிறது.

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைசெல்வதற்கு முன்புவரை சசிகலாவின் கட்டுப்பாட்டில் கட்சியும் ஆட்சியும் இருந்தது. சசிகலா சிறைக்கு சென்ற பிறகு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அந்த தேர்தலில் போட்டியிட வேண்டாம் என சசிகலா அறிவுறுத்தியதாகவும் ஆனாலும் அதை மீறித்தான் தினகரன் தேர்தலில் போட்டியிட்டதாகவும் தகவல்கள் வந்தன. 

அப்போது, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் என அனைவரையும் பாரபட்சமின்றி பிரசாரத்திற்கு பயன்படுத்தியதும் ஆட்சியாளர்கள் மீது அதிகாரம் செலுத்தியதும் தான் தினகரன் மீதான ஆட்சியாளர்களின் கோபத்திற்கு காரணமாக அமைந்ததாக அதிமுகவின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன. அதனால், சசிகலாவையும் தினகரனையும் கட்சியிலிருந்து ஓரங்கட்ட நினைத்த ஆட்சியாளர்கள், ஓபிஎஸ் அணியுடன் இணைந்து தினகரனையும் சசிகலாவையும் அவர்களது குடும்பத்தினரின் ஆதிக்கத்தையும் ஓரங்கட்டிவிட்டு, தேர்தல் ஆணையத்திற்கு சென்று இரட்டை இலையையும் மீட்டுவிட்டனர்.

தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் அதிமுக வேட்பாளராக மதுசூதனன் களம் காண்கிறார். இந்நிலையில், கட்சியையும் சின்னத்தையும் மீட்பதற்கான போராட்டம் இந்த தேர்தல்தான் என கூறி இரட்டை இலையை எதிர்த்து களம் காண்கிறார் தினகரன்.

இம்முறையும் தினகரனை ஆர்.கே.நகரில் போட்டியிட வேண்டாம் என சசிகலா அறிவுறுத்தியதாக கூறப்பட்டது. ஆனால், இந்த தேர்தல் தான், இழந்த இரட்டை இலையையும் கட்சியையும் மீட்பதற்கு சரியான களம் என கருதிய தினகரன், போட்டியிடும் தனது முடிவிலிருந்து பின்வாங்கவில்லை.

இந்நிலையில், நேற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து தினகரன் பேசினார்.

அப்போது, இரட்டை இலையை எதிர்த்து நீ(தினகரன்) தேர்தலில் நின்றால், அது அக்காவை(ஜெயலலிதாவை) எதிர்த்து நிற்பது போன்று அர்த்தம். அதனால்தான் வேண்டாம் என்று சொல்கிறேன் என சசிகலா தினகரனிடம் கூறியுள்ளார்.

அதற்கு, நாம் இரட்டை இலையை எதிர்க்கவில்லை. இரட்டை இலையை மீட்கவே இந்த போராட்டத்தில் இறங்கி இருக்கிறோம். இந்த முறை விட்டுவிட்டால், பிறகு கட்சியையும் சின்னத்தையும் நிரந்தரமாக இழந்துவிடுவோம். கட்சியை அவர்களிடம் இருந்து மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு விட்டோம். தற்போது மக்கள் மன்றத்தின் முன் நிற்கிறோம். இந்த வாய்ப்பையும் விட்டு ஒதுங்கி நின்றால், மன்னார்குடி குடும்பம் அரசியலை விட்டே ஓடிட்டாங்க. நாங்கதான் விரட்டிவிட்டோம் என பழனிசாமி-பன்னீர்செல்வம் அணி பேசுவார்கள். எனவே ஆர்.கே.நகர் தேர்தல் தான் சரியான களம். இரட்டை இலையை எதிர்த்து எங்கேயும் எப்போதும் பேசப்போவதில்லை. பழனிசாமியையும் பாஜகவையும் எதிர்த்துத்தான் பேசப் போகிறோம் என சசிகலாவிற்கு தினகரன் பதிலளித்தாராம்.

அதற்கு சசிகலா, நீ(தினகரன்) என்ன சொன்னாலும், நாம் ஜெயித்தாலும் கூட, இரட்டை இலை தோற்பதுபோல ஆகிவிடும். இதற்காகவா அக்கா(ஜெயலலிதா) பாடுபட்டார்? ஆர்.கே.நகர் அக்கா களம் கண்ட தொகுதி. அங்கே அவர் போட்டியிட்ட இரட்டை இலை தோற்றுவிடக்கூடாது. அடுத்த தேர்தல் வரும்போது பார்த்துக்கொள்ளலாம். சற்று அமைதியாக இரு என சசிகலா தினகரனிடம் கூறியிருக்கிறார்.

இதற்கிடையே சசிகலாவுடன் இருந்த இளவரசி, நீங்க(தினகரன்) செய்யும் அரசியலில் யாருக்கும் எந்த லாபமும் கிடையாது. நமது தொழில்களும் முடங்கியிருக்கிறது. பாஜகவும் பழனிசாமி அரசும் நமக்கு எதிராக இருக்கிறது. மிடாஸிலிருந்து டாஸ்மாக்கிற்கு கொள்முதலை நிறுத்திவிட்டார்கள்.

அதனால் மிடாஸ் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அவர்களை எதிர்த்து தொடர்ந்து அரசியல் செய்து இருக்கிற தொழில்களையும் இழந்துவிடக்கூடாது. அரசியலைவிட தொழில்களும் முக்கியம். மிடாஸ் போல மற்ற தொழில்களும் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது. அதுமட்டுமல்லாமல், உங்களால்(தினகரனால்) எதையும் சரியாக செய்யமுடியவில்லை. ஆதரவாளர்கள் எதிரணியில் சேர்ந்துகொண்டிருக்கின்றனர். அதையும் உங்களால் தடுக்க முடியவில்லை. அதனால் கொஞ்ச நாட்களுக்கு அமைதியாக இருங்க என இளவரசியும் தினகரனிடம் சொன்னாராம்.

ஆனால், எதற்கும் செவிமடுக்காத தினகரன், அரசியலையும் தொழிலையும் ஒன்றாக இணைத்து பார்க்க முடியாது. அடுத்த தேர்தல் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டால், அதற்குப்பிறகு கட்சி இருக்காது. தேர்தலில் போட்டியிடுவதாக கூறிவிட்டு பிறகு பின்வாங்கினால் சரியாக இருக்காது. இரட்டை இலையை மீட்க வேண்டும் என்றால் நமது வலிமையை நாம் காட்டித்தான் ஆக வேண்டும். அதற்கு தேர்தல்தான் ஒரே வழி என தினகரன் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டாராம்.

அப்போது தினகரனுடன் இருந்த புகழேந்தியும் சசிகலாவை சமாதானப்படுத்தியிருக்கிறார். ஆனாலும் சசிகலா சமாதானமாகவில்லையாம்.

ஆனாலும் தனது முடிவில் சற்றும் பின்வாங்காத தினகரன், ஆர்.கே.நகரில் போட்டியிடுவதில் உறுதியாக இருக்கிறார். அதை ஊடகங்களிடம் தெரிவித்தும் விட்டார். அவர் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

தினகரனின் போராட்டம் வெல்லுமா..? பொறுத்திருந்து பார்ப்போம்..