ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோரிடம் விசாரணை நடத்துமாறு விசாரணை ஆணையத்திடம் சசிகலா தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரணை நடத்திவருகிறது.

விசாரணை ஆணையத்தில் சசிகலா சார்பில் அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் ஆஜரானார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜா செந்தூர் பாண்டியன், தினகரனின் கட்சி பெயர் மற்றும் சின்னம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. எனவே எங்களால் நாளை ஏழு மருத்துவர்களிடம் குறுக்கு விசாரணை செய்ய இயலாது என்பதை விசாரணை ஆணையத்தில் தெரிவித்தோம்.

விசாரணையை காலம் தாழ்த்தக்கூடாது என்பதற்காக நாளை விமலா மற்றும் நாராயணபாபு ஆகிய இரண்டு மருத்துவர்களிடம், எனது உதவி வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை செய்வார்கள். எஞ்சிய ஐந்து மருத்துவர்கள் உட்பட 13 பேரை வரும் ஏப்ரல் 5 மற்றும் 6 ஆம் தேதி குறுக்கு விசாரணை செய்ய விசாரணை ஆணையம் அனுமதி அளித்திருக்கிறது. 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்தார்.