மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாகக் கூறிவந்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டில் சந்தித்து அதிமுக கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ளதாகக் கூறியுள்ளார்.

சென்னை, கிரீன்வேஸ் சாலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், “துணை முதல்வரும், அமைச்சர் ஜெயகுமாரும் என்னைச் சந்தித்து தனித்துப் போட்டி என்ற நிலைப்பாட்டை மாற்றி அதிமுகவிற்கு ஆதரவு தர வேண்டும் என்று கேட்டனர். அதன் அடிப்படையில் எங்கள் உயர்மட்டக் குழுவையும்  மாவட்ட செயலாளர்களையும் கலந்து ஆலோசித்து, அதிமுக கூட்டணிக்கு ஆதரவளிப்பதென்று முடிவு செய்துள்ளோம்.

அதிமுக மட்டுமல்லாது அதன் கூட்டணிக் கட்சிகளான பாமக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை ஆதரித்து பிரசாரம் செய்வேன். தொங்கு பாராளுமன்றம் வந்துவிடக்கூடாது என்பதால் அதிமுக, பாஜக கூட்டணியை ஆதரிக்கிறேன். எங்கள் தேர்தல் அறிக்கையை, அதிமுகவிடம் கோரிக்கைகளாக முன்வைத்துள்ளோம்.

சிறுபான்மையினர் நலன், சமத்துவம் ஆகியவற்றைச் சமரசம் செய்யக்கூடாது என அதிமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். தனித்துப் போட்டி என்கிற எங்கள் நிலைப்பாட்டில் தோற்றுவிட்டோம் என்பதை ஒப்புக்கொள்கிறேன்” என்றும் சரத்குமார் தெரிவித்துள்ளார். சரத்குமார் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதன் பின்னணி அவருக்கு அதிமுக ராஜ்ய சபா எம்பியாக்குவதாக வாக்குறுதியும், சில உதவிகளையும் தருவாக வாக்குறுதி அளிக்கப்பட்டதால்தான் முதல்வர் வீட்டை நோக்கி சென்றிருக்கிறார் அவர். 

அதிமுக தலைமையிலான கூட்டணி இறுதியான பிறகே சரத்குமாரை அழைத்த அதிமுக நிர்வாகிகள், ’இந்தத் தேர்தலில் நீங்கள் தனித்துப் போட்டியிட வேண்டாம். அ.தி.மு.க.வுக்கு ஆதரவு தாருங்கள் என பேசியுள்ளனர். அப்படியானால் எங்களுக்கு ஒரு தொகுதியை ஒதுக்கவேண்டும் என சரத் குமார் கேட்டுள்ளார். சீட் எல்லாம் ஒதுக்கி முடிவடைந்து விட்டது. இனி சீட் கிடைக்காது. ஆனால், சில உதவிகளை செய்து தருகிறோம். மக்களவை தேர்தலிலும், இடைத்தேர்தலிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் ராஜ்ய சபா எம்.பி பதவி தருவதாக அதிமுக கூறியுள்ளது. ஆஹா... இந்த ஆபஃர் நன்றாக இருக்கிறதே என உணர்ந்து கொண்டே சரத் குமார் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய சம்மதித்தாராம்.