பிறந்த நாள் கொண்டாடிக் கொண்டிருந்த சரத்குமாரிடம் செய்தியாளர்கள் ரஜினி பற்றி கேள்வி எழுப்பியதால் பயங்கர டென்சன் ஆனார்.

தனது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தியாகராய நகரில் சரத்குமார் கட்சி நிர்வாகிகளுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து செய்தியாளர்களையும் சரத்குமார் சந்தித்தார். துவக்கம் முதலே சரத்குமார் பயங்கர ஜாலியாக பேசி வந்தார். விம்பிள்டன் டென்னிஸ், அமெரிக்கா, ஐரோப்பா என்று உலக விஷயங்களை பேசி செய்தியாளர் சந்திப்பை கலகலப்பாக்கினார். மேலும் மேட்டூரில் தண்ணீர் திறக்காத காரணத்தினல் கருப்பு சட்டை அணிந்து பிறந்த நாள் கொண்டாடுவதாக சரத்குமார் நூதன விளக்கம் எல்லாம் அளித்தார்.

ஆனால் தமிழக அரசை ஊழல் அரசு என்று அமித் ஷா சொல்வதை ஏற்க முடியாது என்று சரத்குமார் தெரிவித்தார். தமிழக அரசை காட்டிலும் அதிகம ஊழல் செய்யும் அரசுகள் வட மாநிலங்களில் இருப்பதாக கூறி சரத்குமார் வட மாநிலங்களில் நிகழ்வது போல் 10 பேர் 12 பேர் சேர்ந்து தமிழ்நாட்டில் பெண்களை பலாத்காரம் செய்வதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் மதக்கலவரம், ஜாதிக்கலவரம் இல்லை என்ற சரத், வட மாநிலங்களில் மாதத்திற்கு ஒரு மதக்கலவரம் நடப்பதை சுட்டிக்காட்டினார்.

சரத்குமார் வெகு ஆர்வமாக பேசிக் கொண்டிருந்த போது குறுக்கிட்ட செய்தியாளர்கள் ரஜினி என்று தான் கேள்வியை துவக்க ஆரம்பித்தனர். இதனால் கடுமையாக டென்சன் ஆன சரத்குமார், இன்று எனக்கு பிறந்த நாள் இன்றும் நான் ரஜினி, கமலை பற்றி பேசி அவர்களை பெரிய தலைவர்கள் ஆக்க வேண்டுமா? நான் 22 வருடங்களாக அரசியலில் உள்ளேன், ரஜினி இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை, அவரைப்பற்றி நான் ஏன் பேச வேண்டும்.

செய்தியாளர்கள் எங்கு சென்றாலும் என்னிடம் ரஜினி, கமலை பற்றியே கேட்கின்றனர். நான் எதற்கு ரஜினி கமலை பற்றி பேச வேண்டும். அவர்கள் என்ன மாபெரும் தலைவர்களா? செய்தியாளர்கள் என்னிடம் கேட்க எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது, சும்மா ரஜினி, கமலை பற்றி மட்டுமே என்னிடம் கேட்காதீர்கள். இருவரும் தீவிர அரசியலுக்கு வந்து தாக்குப்பிடிக்கட்டும், அதன் பிறகு அவர்கள் கருத்துக்கு நான் பதில் அளிக்கிறேன். தற்போது ரஜினி பற்றிய கேள்விக்கு என்னால் பதில் அளிக்க முடியாது.

இவ்வாறு கடும் டென்சனுடன் தனது செய்தியாளர் சந்திப்பை நிறைவு செய்தார் சரத்குமார்.