Asianet News Tamil

என்னை முதல்வராக்கினால் விஜயகாந்த் உடன் கூட்டணி!! தே.மு.தி.கவினருக்கு ஹார்ட் அட்டாக் வரவழைத்த சரத்குமார்!!

தமிழ் சினிமா உலகில் ரஜினிகாந்தில் துவங்கி யோகிபாபு வரை அத்தனை பேருக்கும் அரசியல் ஆசை போட்டு ஆட்டுகிறது. இவர்கள் அரசியலுக்குள் வருவார்களா? வந்தால் ஜெயிப்பார்களா? என்பது தனி பட்டிமன்ற விவாதம். 

Sarathkumar condition for alliance with Vijayakath
Author
Chennai, First Published Oct 5, 2018, 2:48 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தமிழ் சினிமா உலகில் ரஜினிகாந்தில் துவங்கி யோகிபாபு வரை அத்தனை பேருக்கும் அரசியல் ஆசை போட்டு ஆட்டுகிறது. இவர்கள் அரசியலுக்குள் வருவார்களா? வந்தால் ஜெயிப்பார்களா? என்பது தனி பட்டிமன்ற விவாதம். 

அதே வேளையில் ஏற்கனவே கட்சி துவங்கி அரசியலுக்குள் நுழைந்து, நல்ல பதவிகளையும் பெற்று, ஆனால் சாமர்த்தியமற்ற செயல்பாடுகளால் மிகப்பெரிய சரிவை சந்தித்து எழமுடியாமல் கிடப்பவர்கள் விஜயகாந்தும், சரத்குமாரும். 

இருவரும் சினிமா உலகில் எப்படியோ தெரியவில்லை, ஆனால் அரசியலில் இருவருக்கும் பகையாகத்தான் இதுவரையில் இருந்தது. இந்த சூழ்நிலையில்! சமீபத்தில், விஜயகாந்துடன் கூட்டணி சேர்வதற்கான முயற்சியில் இறங்கியிருக்கிறார் சரத். இது பற்றி வெளிப்படையாகவே நூல் விட்டுப் பார்த்தார் ஆனால் கேப்டனோ பலத்த யோசனையிலிருக்கிறார். 

இந்த சூழலில் தனது முயற்சி பற்றி விரிவாக பேசும் சரத்குமார் “நானும் விஜய்காந்தும் நெருங்கிய நண்பர்கள்தான். சினிமா, நடிகர் சங்கம் என அவருடன் ஒன்றாக பயணித்துள்ளேன். அரசியலில் இருவரும் எதிர் எதிர் தரப்பில் நின்றோம். உண்மைதான். அவர் எதிர்கட்சி தலைவராக நின்று கோபம் காட்டினார், நானோ அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து ஜெயலலிதாவை ஆதரித்து பேசினேன். இதனால் முரண்பட்டோம். 

ஆனால் அரசியலில் மாறுபட்ட கருத்துடையவர்கள் பின் ஒரு காலத்தில் இணைந்து கொள்வது வாடிக்கைதானே! இதுவரையில் எங்கள் இருவருக்கும் இடையில் பர்ஷனலாக எந்த பிரச்னையுமில்லை, அவருடனான நட்பில் விரிசலுமில்லை. அதனால் அவருடன் கூட்டணி வைப்பதில் தவறில்லை.” என்றவர் தொடர்ந்து “நான் இருபது வருடங்களுக்கு மேலாக அரசியலில் இருக்கிறேன். வெற்றிகரமான ஹீரோவாக இருந்தபோதே அரசியலுக்கு வந்துவிட்டேன். மக்களை சென்று சந்திக்கிறேனே தவிர வீட்டில் இருந்து அரசியல் செய்யவில்லை. 

மக்கள் இப்போது மாற்றத்தை எதிர்நோக்குவது நன்றாக புரிகிறது. திறமை வாய்ந்த, திடமான, நேர்மையான, மக்களோடு மக்களாக உள்ள தலைவர் இப்போது தேவைப்படுகிறார். என்னைப் பொறுத்தவரை அந்த தேவையை நான் புர்த்தி செய்வேன். எனக்கு முதல்வராகும்  வாய்ப்பு கொடுத்தால், மாற்றத்தை ஏற்படுத்த என்னால் இயலும்.” என்று போட்டாரே ஒரு போடு. 

இதில்தான் டென்ஷனாகிவிட்டனர் தே.மு.தி.க. நிர்வாகிகள். ஏற்கனவே சரத்தின் கூட்டணி மூவ் பற்றி அவர்களிடம் ஆலோசித்திருந்த விஜயகாந்த் ‘நானும் அவரும் நண்பர்தான், இல்லைங்கள. அரசியல்ல இப்படி இருக்குறதும் பிறகு சேர்றதும் இயல்புதானே! என்ன சொல்றீங்க அவரை சேர்த்து இயங்கலாமா?’ என்று கேட்டிருந்தார். ஆனால் ‘எனக்கு முதல்வர் வாய்ப்பு தந்தால் மாற்றம் உருவாக்குவேன்’ என்று சரத் சொன்னதும் கேப்டனின் தளபதிகள் டென்ஷனாகிவிட்டனர். 

அவர்கள் சரத்தின் இந்த பேட்டியை சுட்டிக்காட்டி, “சரத்குமாரை திரும்பிப் பார்க்கலாமா?ன்னு நீங்க கேட்டீங்க. ஆனா இன்னமும் அவரு முதலமைச்சர் கனவுலதான் இருக்காருங்க கேப்டன். எங்களைப் பொறுத்தவரைக்கும் நாம எத்தனை கட்சிகளோடு கூட்டணி வெச்சாலும் அதன் தலைவர் நீங்கதான், முதல்வர் வேட்பாளர் நீங்கதான், அந்த கூட்டணி ஜெயித்தால் முதல்வர் நீங்கதான். துணை முதல்வர் வாய்ப்பு கூட யாரும் பெற தகுதியில்லை. இந்த சூழல்ல இப்படி பேசும் சரத்குமாரை எப்படி ஏத்துக்க முடியும்?

அவர் கையில் இப்ப தொண்டனுமில்லை, கட்சியுமில்லை. ஏதோ பழைய மரியாதையில சுத்திட்டு இருக்கார். திருநெல்வேலி, தூத்துக்குடியில் கூட அவருக்கு யாரும் ஆதரவில்லை. இந்த நிலையில வகையா சவாரி செய்ய ஒரு குதிரையை எதிர்பார்க்கிறார். அதனாலதான் துடிப்பா இருக்கிற உங்களை சுரண்டிக் கூப்பிடுறார். ஆனால் உள்ளூர முதலமைச்சர் ஆசையை வெச்சுக்கிட்டு இருக்கிற அவரை நாம யோசிக்க வேண்டியதே இல்லை.” என்று ஆதங்கப்பட்டு கொட்டிவிட்டனர். 

தன் கட்சி பிள்ளைகள் சொல்வதை கேட்டு புளங்காகிதமடைந்து புன்னகைத்த கேப்டன் “கூட்டணி வெச்சுக்கலாம், ஜெயிச்சதும் ஏதோ மந்திரி பதவி கூட யோசிக்கலாம்-ன்னு நினைச்சேன். ஆனா அவரோ முதலமைச்சர் பதவி கனவுலேயா இருக்கார்? யாருக்கு எது மேலே ஆசை பார்த்தீங்களா? இனி அவரை நாம கண்டுக்க வேண்டிய அவசியமேயில்லை.” என்று கண் சிவந்திருக்கிறார். 

அதானே, யாருக்கு எது மேலே ஆசை பார்த்தீங்களா? ஆங்!

Follow Us:
Download App:
  • android
  • ios