தென் மாவட்டங்களில் உள்ள, மக்களவைத் தொகுதிகளின் வெற்றிக்கு, நாடார் சமூக ஓட்டுகளை மொத்தமாக அள்ளவே, பாஜக மேலிட  உத்தரவுப்படி  சரத்குமார் அதிமுக கூட்டணிக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட, தென் மாவட்டங்களில், சரத்குமார் சார்ந்துள்ள, நாடார் ஓட்டுகள் கணிசமாக உள்ளன. அந்த சமூக மக்கள், வட சென்னையிலும், அதிக எண்ணிக்கையில் உள்ளனர். இதனால், கடந்த ஆண்டு நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சரத்குமாரின் ஆதரவை, தினகரன் தரப்பு கோரியது. அவரும் ஆதரவு தெரிவித்து, வட சென்னை, தொகுதியில் பிரசாரத்துக்கு கிளம்ப இருந்தார். 

ஆனால் சரத்குமாரின் வீட்டில், வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதற்கு பின்னணியில், பாஜக இருப்பதாக, சரத்குமார் கருதினார்.
இதனால், பாஜக மீதும், அதனுடன் நெருக்கம் காட்டிய, அதிமுக மீதும், சரத்குமார் அதிருப்தியில் இருந்தார். 

இதையடுத்து கருணாநிதி மறைவை சாதகமாக்கி, திமுக பக்கம் சாய, சரத்குமார் திட்டமிட்டார்.இதற்காக, மக்களவைத் தேர்தலில் தனக்கு ஒரு, 'சீட்' என்ற நிபந்தனையுடன், மனைவி ராதிகா வாயிலாக, திமுக தலைவர்களுடன் பேச்சு நடத்தினார்.
 
ஆனால் அதை, ஸ்டாலின் ஏற்கவில்லை. இதனால் அதிமுக அணியில் இணைய, சரத் விரும்பினார். பாஜக - பாமக - தேமுதிக., - புதிய தமிழகம் - புதிய நீதி கட்சிகளுடன், அதிமுக., மெகா கூட்டணி அமைத்ததால், சரத்துக்கு, சீட் இல்லை என, தெரிவிக்கப்பட்டது. 

இதனால், தேர்தலை புறக்கணிக்கும் முடிவில் இருந்தார்.அதிமுக கூட்டணியில், பாஜக போட்டியிடும், துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய, நான்கு தொகுதிகளிலும், சரத்குமார் சார்ந்துள்ள நாடார் சமூகத்தின் ஓட்டுகள் கணிசமாக உள்ளன.

குறிப்பாக, திமுகவின், வி.ஐ.பி., வேட்பாளரான, கனிமொழி போட்டியிடும், துாத்துக்குடி தொகுதியில், அதிக ஓட்டுகள் உள்ளன. இதனால், நாடார் சமூக ஓட்டுகளை, மொத்தமாக தங்கள் கூட்டணி கைப்பற்ற, சரத்குமார்  ஆதரவு தேவை என்ற தகவலை, மத்திய உளவு துறை, டில்லி, பாஜக மேலிடத்திடம் தெரிவித்தது. 

அதன் அடிப்படையில், தங்கள் பக்கம் சரத்தை இழுக்குமாறு, அதிமுகவை, பாஜக அறிவுறுத்தியது.அதன் தொடர்ச்சியாகவே, துணை முதலமைச்சர் ஓபீஎஸ் சரத்குமார் வீட்டிற்கு சென்று, ஆதரவை கோரினார். 

அப்போது, சட்டசபை தேர்தலில், சரத்குமார் கட்சிக்கு, சீட் ஒதுக்குவது உள்ளிட்ட வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து, எடப்பாடி மற்றும்  அமைச்சர்களை சந்தித்து, அதிமுக அணிக்கு ஆதரவு தெரிவித்து, பிரசாரத்தில் ஈடுபட போவதாக, சரத்குமார் அறிவித்துள்ளார்.
 
ஆனாலும் சரத்குமாருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முதல் அசைன்மெண்ட்டே தூத்துக்குடியில் போட்டியிடும் கனிமொழியைத் தோற்கடிப்பதுதான். அதன் மூலம் பாஜக வேட்பாளர் தமிழிசையை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதே.