மஹாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்பதில் பாஜக -  சிவசேனா கூட்டணி இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. இரு கட்சிகளும் முதலமைச்சர்  பதவிக்கு போட்டி போடுவதால் சமரசம் ஏற்படவில்லை. 

இதனால், பாஜக ஒத்துவரவில்லை எனில், காங்கிரஸ்  மற்றும் தேசியவாத காங்கிரஸ் ., கட்சியுடன் கூட்டணி அமைக்க போவதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறினார்.

இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ்  தலைவர் சரத்பவாரின் பேரனும், கார்ஜத் ஜாம்கெத் தொகுதி எம்.எல்.ஏ.,வும் ஆன ரோகித் ராஜேந்திர பவார் தனது பேஸ்புக் பக்கத்தில், பாஜகவை கடுமையாக குற்றம்சாட்டி பதிவிட்டுள்ளார்.

அதில் , மஹாராஷ்டிராவில் மக்களிடம் நன்மதிப்பை பெற்ற தலைவர்களுள் ஒருவராக மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே இருக்கிறார். தேசிய அரசியலில் உயரம் தொட்ட அவரை நான் மதிக்கிறேன். தேர்தலுக்கு முன்பே ஆட்சியில் சமபங்கு என சிவசேனாவுக்கு பாஜக , வாக்குறுதி அளித்துவிட்டது. ஆனால் இப்போது அதற்கு எதிராக நடந்து வருகிறது.

பால்தாக்கரே தற்போது உயிரோடு இருந்திருந்தால் பாஜக  இதுபோல் தைரியமாக இருக்குமா என்ற கேள்வி எழுகிறது. தற்போதைய மோதல்களை பார்க்கும் போது அடுத்த 5 ஆண்டுகளுக்கு பாஜக- சிவசேனா கூட்டணியால் நிலையான ஆட்சி அமைக்க முடியுமா என்ற அச்சம் எழுகிறது என்று ரோகித்  அதில் பதிவிட்டுள்ளார்.