சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கின் விசாரணைக்காக நேரில் ஆஜராகும் படி கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆகையால் விசாரணைக்கு பிறகு எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படட வாய்ப்புள்ளதால் சிபிஐ நோட்டீஸை ரத்து செய்ய கோரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ராஜீவ்குமார் மனுத்தாக்கல் செய்துள்ளார். 

மேற்கு வங்க மாநிலத்தில் செயல்பட்டு வந்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் சுமார் 4000 கோடி அளவுக்கு பண மோசடியில் ஈடுபட்டது. அந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணை அதிகாரியாக ஐபிஎஸ் அதிகாரி ராஜீவ்குமார் நியமிக்கப்பட்டிருந்தார். இவரின் தலைமையிலான விசாரணை முழுமையாக நடைபெறவில்லை என்பதால் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. மேலும் சிபிஐ விசாரணையில் பணமுறைகேடு விவகாரம் தொடர்பான ஆவணங்களை அழித்தார் என்று குற்றம்சாட்டியது. 

இதுதொடர்பாக அவரை கைது செய்ய சிபிஐ முயற்சித்த போது, மாநில முதல்வர்கள் அனுமதி இல்லாமல் சிபிஐ உள்ளே நுழையக்கூடாது. மேலும் சிபிஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மம்தா பானர்ஜி தர்ணா போராட்டம் நடத்தினார். இதையடுத்து சிபிஐ மற்றும் ராஜீவ்குமார் இரு தரப்பும்  உச்சநீதிமன்றத்தை அணுகியது. ஆனால் ராஜீவ் குமாரை மே 24-ம் தேதிவரை கைது செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது. 

இதனிடையே மக்களவை தேர்தலுக்கு முன்பாக காவல்துறை ஆணையர் பதவியில் இருந்து ராஜீவ்குமாரை தேர்தல் குழு நீக்கியது. கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடைக்காலம் நிறைவடைந்த நிலையில், தடையை நீட்டிக்க வேண்டும் என ராஜீவ்குமார் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஆனால் இந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

இந்நிலையில் இந்த வழக்கில் ராஜீவ் குமாரை நேரில் ஆஜராகும்படி சிபிஐ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அப்போது விசாரணைக்கு பிறகு அவரை கைது செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியானது. இந்நிலையில், தமக்கு சிபிஐ அனுப்பியுள்ள சம்மனை ரத்து செய்யக்கோரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ்குமார் மனு  தாக்கல் செய்துள்ளார்.