ஒபிஎஸ் அணியில் இருந்து வெளியேற எடப்பாடி அணியினரும், டிடிவி அணியினரும் 5 கோடி ரூபாய் வரை பேரம் பேசியதாக ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ சண்முகநாதன் எழுப்பிய குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அவருக்கு அவ்வளவு விலையா என நாஞ்சில் சம்பத் திடுக்கிட்டார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு பிளவுபட்ட அதிமுகவை இணைக்கும் பணி குறித்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இரு அணிகளும் விரைவில் இணையும் என்று எடப்பாடி அணியினர் பேசி வருகின்றனர்.

ஆனால் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் இணைப்புக்கு சாத்தியமில்லை என்றும், ஊழல் அரசுக்கு துணை போவது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் தெரிவித்து வருகிறார்.

இதனிடையே ஒபிஎஸ்சின் ஆதரவாளரான ஸ்ரீ வைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ சண்முகநாதன், டிடிவி தினகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் அணியில் சேர ரூ.5 கோடி வரை பேரம் பேசியதாக தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் நாஞ்சில் சம்பத்திடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்து பேசிய அவர், சன்முகநாதனுக்கு அவ்வளவு விலையா என திடுக்கிட்டார். மேலும் அதற்கான தேவை எங்களுக்கு இல்லை எனவும் தெரிவித்தார்.