இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் அவரது சகோதரர் கங்கை அமரன் ஆகியோரது பின்னணியில் சங்கப்பரிவார கும்பல் இயங்கி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் அவரது சகோதரர் கங்கை அமரன் ஆகியோரது பின்னணியில் சங்கப்பரிவார கும்பல் இயங்கி வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நிலவிவரும் வன்கொடுமைகளை தடுக்க தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார் இளையராஜா, கங்கை மீது தான் இரக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். 

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் இளையராஜா அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டு எழுதப்பட்ட புத்தகத்திற்கு முன்னுரை எழுதியிருந்தார். இது நாடு முழுவதும் விவாத பொருளாக மாறியுள்ளது. சட்டமேதை அண்ணல் அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டதை அம்பேத்கரியவாதிகள், மற்றும் பெரியாரியவாதிகள் எதிர்த்து வருகின்றனர். இதே நேரத்தில் யூடியூப் சேனலுக்கு பேட்டி கொடுத்துள்ள, கங்கைஅமரன் இளையராஜா மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டதே பலரும் விமர்சித்து வருகிறீர்களே, அம்பேத்கருடன் திருமாவளவனையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் ஒப்பிடுவது சரியா? என கேள்வி எழுப்பியுள்ளார். இது சர்ச்சையாக மாறியுள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு:- விக்னேஷ் காவல் மரணம் நீதித்துறை மற்றும் காவல்துறை கட்டுப்பாட்டின் கீழே இது போன்ற மரணங்கள் நிகழ்வது வேதனை அளிக்கிறது, இது போன்ற மரணங்கள் ஆளும் ஆட்சியாளர்களுக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் இவற்றில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒருபோதும் இனி இப்படி நிகழக்கூடாது. என்னை அம்பேத்கருடன் ஒப்பிடலாமா, முதலமைச்சரை அம்பேத்கருடன் ஒப்பிடலாமா என கங்கைஅமரன் கேள்வி எழுப்பியுள்ளார், அவருக்கு இந்த கேள்வியை சங்கப் பரிவார் கும்பலை சேர்ந்தவர்கள் சொல்லிக் கொடுக்கிறார்கள். இளையராஜா மற்றும் கங்கை அமரன் பின்னால் சங்கபரிவார் கும்பல் இயங்கிக்கொண்டிருக்கிறது. நான் அவர்களை எண்ணி பரிதாபப்படுகிறேன், அவர்களை எண்ணி வேதனைப்படுகிறேன் என்றார்.

தருமபுர ஆதினம் பட்டினப்பிரவேசம் விவகாரம் குறித்து பதில் அளித்த அவர் மனிதாபிமான அடிப்படையில் மரபு அடிப்படையில் ஒருவரை உழைக்கும் மக்கள் தோளில் சுமப்பது ஏற்புடையது அல்ல. ஆதினத்தைச் சேர்ந்தவர்கள் விருப்பப்பட்டால் வேண்டுமானால் தோளில் சுமந்துகொள்ளட்டும், மனித உரிமை, தன்மானம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவர்கள் எவராலும் இந்த கலாச்சாரத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார். இதை காட்டி இந்து மக்களுக்கு எதிராக அரசு நடக்கிறது என சங்கப் பரிவார் கும்பல் அவதூறு பரப்பி வருகிறது அது கண்டிக்கத்தக்கது என திருமாவளவன் கூறினார்.