மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபின்  விவசாயிகள் தொடர்ந்து அல்லல் பட்டு வருவதாகவும், அவர்களது தற்கொலை இரட்டிப்பாகி இருக்கிறதே ஒழிய  வருவாய் உயரவில்லை என  சிவசேனா கட்சி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

கடந்த வாரம் வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் இந்தியாவில் உள்ள 600 மாவட்டங்களில் விவசாயிகளுடன் உரையாடினார். அப்போது,  பேசிய மோடி வரும் 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் நோக்குடன் பட்ஜெட்டில் நிதி அளவை 2 புள்ளி 12 லட்சம்  கோடியாக மத்திய அரசு உயர்த்தி உள்ளதாக தெரிவித்தார். இதனை பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்து தற்போது விலகியுள்ள சிவசேனா மிகக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

இது  தொடர்பாக  சிவசேனா கட்சியின்  அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் இந்தியாவை  ஆளும் பாஜக  மக்களிடம் வாக்குறுதிகளைக் கொடுப்பதில் ஒரு போதும் சோர்வடைவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொய்களையும் வெற்று வாக்குறுதிகளையும் அள்ளி வீசுவதில் பாஜகவுக்கு நிகர் யாருமில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர்களின் வாக்குறுதிகள் அனைத்தும் வெற்றுத்தனமாக, வார்த்தைஜாலமாகவே இருக்கிறது. அண்மையில்  பிரதமர் மோடி விவசாயிகளின் வருமானத்தை 2022-ம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கிவிடுவேன் என்று வாக்குறுதி அளித்து இருக்கிறார்.

இது ஒன்றும் புதிய வாக்குறுதி அல்ல.கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியில்கூட இதே போன்று வாக்குறுதி அளித்து இருந்தது பாஜக. அதன் மூலமே மத்தியில்ஆட்சியைப் பிடிக்க முடிந்தது. பிரதமர் மோடி மறுபடியும் பழைய ஒலிநாடாவை போட்டு ஜாலம் காட்டுகிறார்.

ஆனால் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்குப் பதிலாக அவர்களின் நிலைமைதான் மோசமடைந்து இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்தபின், விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகவில்லை, தற்கொலைதான் இரட்டிப்பாகியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கவும், இரட்டிப்பாக்கவும் என்னென்ன நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளது என்பதை வெளிப்படையாக அறிவிக்க முடியுமா ? என சாம்னா கேள்வி எழுப்பியுள்ளது