‘பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்த்துப் போராட,  அனைத்து எதிர்க்கட்சிகளும் தேசிய அளவில் கைகோர்க்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் 10ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக உள்ளார். மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தேர்தலில் பாஜக, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, மாயாவதியின் பகுஜன்சமாஜ், காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியே களம் காண்கின்றன.

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ‘ஏசியாநெட்’ நியூசுக்கு பிரத்யேக நேர்காணல் அளித்துள்ளார். அதில், ‘பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை எதிர்த்துப் போராட, அனைத்து எதிர்க்கட்சிகளும் தேசிய அளவில் கைகோர்க்க வேண்டும். உ.பி தேர்தலுக்குப் பிறகு இதை நோக்கிய இயக்கம் உடனடியாகத் தொடங்க வேண்டும்’ என்று கூறியிருக்கிறார்.

இதிலிருந்து அகிலேஷின் அடுத்தடுத்து கூறும் பல்வேறு கருத்துக்களால் இவர் உபியில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதை விட, மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்று நினைக்கிறாரோ என்ற கேள்வி எழுந்து இருக்கிறது.மேலும் பேசிய அகிலேஷ், ‘உ.பி.யில் ஆட்சியமைக்க காங்கிரசின் ஆதரவை நாட வேண்டிய அவசியமில்லை, பெரும்பான்மை பெறுவதற்கான பலம் எங்களிடம் இருக்கிறது. 

காங்கிரஸும் பகுஜன் சமாஜ் கட்சியும் சமாஜ்வாதியை தோற்கடிக்க போட்டி போடுகின்றன. உபியில் ஆட்சி இழந்துவிட்டால், மத்தியிலும் ஆட்சி போய்விடுமோ என்ற பயம் பிரதமர் மோடிக்கு இருக்கிறது. அதனால்தான் பிரதமர்மோடி, மத்திய அமைச்சர்கள், தலைவர்கள் என அனைவரும் பயத்தில் பிரசாரம் செய்கின்றனர். உ.பி.யை விட கேரளா அனைத்து துறைகளிலும் முன்னிலையில் உள்ளது’ என்று அகிலேஷ் கூறினார்.