சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு, தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான தொண்டர்கள் தினமும் வந்து செல்வது வழக்கம்.

கடந்த செப்டம்பர் 22ம் தேதி இரவு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். கடந்த டிசம்பர் 5ம் தேதி சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த இடைப்பட்ட காலத்தில் எந்த தொண்டரும் அங்கு செல்லவில்லை.

இதற்கிடையில், அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வரும் நிர்வாகிகளை கவர்வதற்காக, ஏராளமான சிறு வியாபாரிகள், அங்கு கடை வைத்து இருப்பார்கள். அவர்களிடம் ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா ஆகியோரது புகைப்படங்கள், ஸ்டிக்கர்கள், டைரிகள் உள்பட அதிமுகவை குறிக்கும் பல பொருட்களை, அதிமுகவினர் வாங்கி செல்வார்கள்.

சுமார் 3 மாதத்துக்கு மேல் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு யாரும் செல்லாததால், அந்த சாலை வெறிச்சோடி காணப்பட்டது. இதனால், சிறு வியாபாரிகளும் பாதிப்படைந்தனர்.

இந்நிலையில் கடந்த 29ம் தேதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா அதிமுக பொது செயலாளராக பதவியேற்றார். இதைதொடர்ந்து தினமும் அங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான தொண்டர்கள் வரத் தொடங்கியுள்ளனர்.

ஆனால், சசிகலா அதிமுக பொதுச் செயலாளர் பதவியை வகிக்க சில அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மேலும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதையொட்டி, சென்னை தி.நகரில் உள்ள தீபா வீட்டுக்கு தினமும் ஏராளமானோர் படையெடுத்துள்ளனர்.

இதனால், அதிமுக தலைமை அலுவலகம் அருகில் பிளாட் பாரத்தில் கடை வைத்திருந்த சிறு வியாபாரிகள், தீபா வீட்டின் அருகே குவிந்துவிட்டனர். இங்கு தீபாவை பார்க்க வரும் அதிமுக தொண்டர்கள், வியாபாரிகளிடம் இருந்து அதிகளவில் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், கடந்த 25 ஆண்டுகளாக அதிமுக தலைமை அலுவலகம் அருகே கடை வைத்துஇருந்தோம். தற்போது, அங்கு கூட்டம் குறைந்துவிட்டது. இதனால், தீபா வீட்டின் அருகில் கடை வைத்துள்ளோம்.

அதிமுக தலைமை அலுவலகம் அருகில் கடை வைத்தபோது தினமும் ரூ.200 வரை விற்பனை நடந்தது. தற்போது தீபா வீட்டின் அருகில் தினமும் ரூ.400க்கு குறையாமல் சம்பாதிக்கிறோம். இங்கு வருபவர்கள் ஜெயலலிதா, எம்ஜிஆர், அண்ணா, அதிமுக ஸ்டிக்கர், கொடி உள்பட பலவற்றை வாங்கி செல்கிறார்கள். ஆனால், அவர்கள் கேட்கும் தீபா, படம் எங்களுக்கு கிடைக்கவில்லை. அந்த படமும் கிடைத்தால், எங்களுக்கு ஓரளவுக்கு வருமானமும் பெருகும் என்றனர்.