சேலம் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களில் 16 இடங்களில் ஒன்றியக்குழு தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றுகிறது. மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பதவியும் அதிமுகவின் வசம் செல்கிறது. 

தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி தலைவர், ஒன்றிய குழு தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 
புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர 27 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த வாரம் வெளியானது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான தேர்தலில் அதிமுக 214 இடங்களையும், திமுக 244 இடங்களையும் கைப்பற்றின. 5090 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருக்கான பதவிகளில், அதிமுக 1781 இடங்களிலும், திமுக 2099 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

இந்நிலையில், மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இதில், முதல்வர் எடப்பாடி மாவட்டமான சேலத்தில் 20 ஊராட்சி ஒன்றியங்களிலும் 288 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக 131 வார்டுகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான பாமக 39 வார்டுகளிலும், தேமுதிக 5 வார்டுகளிலும், தமாகா 1 வார்டிலும் வெற்றி பெற்றது.

திமுக கூட்டணியில், திமுக 76 வார்டுகளிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் 4 வார்டுகளிலும், இடதுசாரிகள் 2 வார்டுகளிலும், மதிமுக 1 வார்டிலும் வெற்றி பெற்றன. ஒட்டுமொத்தமாக, அதிமுக கூட்டணிக்கு 176 வார்டுகளும், திமுக கூட்டணிக்கு 83 வார்டுகளும் கிடைத்தன. சுயேட்சைகள் 29 வார்டுகளில் வெற்றி பெற்றன. இதனிடையே, 176 வார்டுகளைக் கைப்பற்றியுள்ள அதிமுக கூட்டணி, மாவட்டத்தின் 20 ஊராட்சி ஒன்றியங்களில் 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல், இன்னும் ஒரு இடங்களில் கூட திமுக வெற்றி பெறவில்லை. மேலும், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் பதவியும் அதிமுகவின் வசமாகிறது.