நான் நினைத்திருந்தால் எந்தக் கட்சிக்கும் போயிருக்கலாம். திமுகவுக்குக்குட சென்றிருக்கலாம். திமுக சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க தயாராகவே இருந்தது.
சைதை துரைசாமி பாஜகவில் இணையப்போகிறாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், இது பற்றி அவர் விளக்கம் அளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ‘மனதின் குரல்’ நிகழ்ச்சி மூலம் ஆற்றிய உரைகளை நூலாக தொகுக்கப்பட்டுள்ளது. இந்த நூல் வெளியிட்டு விழாவில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் சென்னை மேயரும் எம்.எல்.ஏ.வுமான சைதை துரைசாமி பங்கேற்பதாக அழைப்பிதழில் இடம் பெற்றிருந்தது. பாஜக நிகழ்ச்சியில் சைதை துரைசாமி பங்கேற்றதால், அவர் பாஜக பக்கம் தாவுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதொடர்பான அழைப்பிதழ் வலைத்தளங்களில் வைரலானது. அதிமுகவில் ஒதுங்கியிருந்த சைதை துரைசாமி, கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக சார்பில் களமிறக்கப்பட்டார். தேர்தலுக்குப் பிறகு அவர் மீண்டும் அமைதியாகிவிட்டார்.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது தொடர்பாக சைதை துரைசாமி விளக்கம் அளித்துள்ளார். ‘’நான் கல்வியாளராகவும் இருப்பதால பல பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறேன். அதுபோலவே பல கட்சி நண்பர்களும் என்னை பல நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கிறார்கள். அந்த வகையில்தான் பாஜக நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறேன். இதற்கெல்லாம் அரசியல் சாயம் பூசினால் எப்படி? நான் நேற்றும் இன்றும் என்றென்றும் எம்ஜிஆரின் தொண்டனாகவே இருப்பேன். இதில் எந்த மாற்றமும் கிடையாது.

நான் நினைத்திருந்தால் எந்தக் கட்சிக்கும் போயிருக்கலாம். திமுகவுக்குக்குட சென்றிருக்கலாம். திமுக சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்க தயாராகவே இருந்தது. எந்தக் காலகட்டத்திலும் பணத்துக்காகக் கட்சி மாறும் நிலைப்பாட்டை நான் எடுத்தது இல்லை. எனக்கென்று ஒரு கொள்கை உண்டு. அந்தக் கொள்கையோடு நான் பயணித்துக் கொண்டிருப்பவன். எத்தனையோ வழிகளில் எப்படி வேண்டுமானாலும் சம்பாதித்து இருக்கலாம் . ஆனால், நான் அதற்கான ஆள் இல்லை. வீணாக என்னை பற்றி வதந்திகளைப் பரப்ப வேண்டாம்.” என்று சைதை துரைசாமி தெரிவித்துள்ளார்.
