தூத்துக்குடி சம்பவம் துரதிஷ்டவசமானது என்றும் சட்டத்திற்கு உட்பட்டு தான் ஆலை இயங்குகிறது, அரசு, நீதிமன்ற அனுமதி பெற்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்குவோம் என்று ஸ்டெர்லைட் உரிமையாளர் மற்றும் இயக்குனர் அனில் அகர்வால் வீடியோ வெளியிட்டுள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்தி வந்த போராட்டம் கலவரமாக மாறியது. கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வருவதாகக் கூறி போலீசார் மக்கள் மீது கொடூரமாக நடதத்தப்பட்ட இந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாக்கியுள்ளனர்.

இதனையடுத்து துப்பாக்கி சூட்டைக் கண்டித்து தமிழகத்தில் திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டம் வலுவடைந்ததால், சர்ச்சைக்குரிய ஸ்டெர்லைட் காப்பர் தாமிர உருக்காலையை மூடுவதற்கு தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது. நேற்றே அதிகாலையில் அந்த ஆலைக்கான மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளர் அனில் அகர்வால் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், தூத்துக்குடியில் போராட்டத்தின் போது நடந்தது  துரதிர்ஷ்டவசமான சம்பவம். அந்த சம்பவத்தால் நான் மிகவும் வேதனையில் உள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், பேசிய அவர் அரசு, நீதிமன்றங்களின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு தான் ஸ்டெர்லைட் ஆலை இயங்கியது. அரசு மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகளை கடுமையாக பின்பற்றி வருகிறோம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தூத்துக்குடி மக்களின் விருப்பத்துடன் நாங்கள் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க விரும்புகிறோம். தூத்துக்குடியின் வளர்ச்சிக்கும் சுற்றுச்சூழலுக்கும் உதவியாக ஸ்டெர்லைட் இருக்கும் என உறுதியளிக்கிறேன்.

பராமரிப்பு பணிக்காக தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலை அரசு, நீதிமன்ற அனுமதி பெற்று மீண்டும் இயங்கும் என அனில் அகர்வால் தனது வீடியோ பதிவில் கூறியிள்ளார்.