கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலுக்கு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல தடை இருந்து வந்த நிலையில், அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

பாரதீய ஜனதா உள்ளிட்ட சில கட்சிகளும், இந்து அமைப்புகளும் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தன. தீர்ப்புக்கு எதிராக கேரளாவில் போராட்டங்கள் நடைபெற்றன. சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தொடர்ந்து, கடந்த ஆண்டு மகர விளக்கு, மண்டல பூஜையையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்ற பல பெண்கள் போராட்டக்காரர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதற்கிடையே, அனைத்து வயது பெண்களையும் அனு மதிக்கும் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி பல்வேறு தரப்பினரால் சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு, இந்த வழக்கை 7 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம் உள்ளிட்ட மதத்தின் அடிப்படையிலான நடை முறைகள் பற்றி இந்த அமர்வு விசாரித்து தீர்ப்பு வழங்கும்.

7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும் வரை, ஏற்கனவே சபரிமலை கோவிலுக்கு செல்ல அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு நடைமுறையில் இருக்கும்.

இந்தநிலையில், மண்டல பூஜை, மகர விளக்குக்காக சபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று  மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி சன்னிதானம், பம்பை, நிலக்கல் பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

அதே நேரத்தில் ஏராளமான பெண்கள் சபரிமலை கோவிலுக்கு செல்ல ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து உள்ளனர்.இதனால் சென்ற ஆண்டைப் போலவே பதற்றம் நிலவுகிறது. பெண்கள் கோவிலுக்குள் நுழைய முற்பட்டால் அவர்களை தடுத்து நிறுத்த பாஜக, இந்து முன்னணி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சித் தொண்டர்கள் தயாராக உள்ளனர்.

இந்த நிலையில், கேரள தேவசம்போர்டு அமைச்சர் மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன் சபரிமலை கோவிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை. இதை மீறி தரிசனத்துக்கு வரும் பெண்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட மாட்டாது. பெண்கள் மலை ஏற அரசு எப்போதுமே உடந்தையாக இருந்தது இல்லை. தனிப்பட்ட முறையில் மலை ஏற வரும் பெண்கள் நீதிமன்றத்தின் உத்தரவுடன் வரவேண்டும் என தெரிவித்தார்.
.
இதையடுத்து எந்தவித சமரசத்திற்கும் இடம் அளிக்காத வகையில் போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புடன் செயல்படுவார்கள் என்றும் அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார்.

 இதனிடையே திருவனந்தபுரத்தில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் செயற்குழு கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட்டின் இறுதி தீர்ப்பு வரும் வரை சபரிமலை கோவிலில் பெண்களுக்கு அனுமதி அளிக்க தேவை இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டது. எனவே இந்த ஆண்டு பெரிய அளவில் பிரச்சனை இருப்பாது என்றே கூறப்படுகிறது.

அதே நேரத்தில் சபரிமலை தரிசனத்திற்கு ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ள பெண்களும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.